பலத்த மழையால் சாலையில் உருண்டு விழுந்த பாறைகள்
கூடலூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தன.
கூடலூர்,
கூடலூர் பகுதியில் சமீபத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துவிட்டது என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதன்பிறகு போதிய மழை பெய்யவில்லை.
இதனால் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து குறைந்தது.இந்த நிலையில் கூடலூர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் மீண்டும் மழை பெய்தது. நள்ளிரவு 1 மணியளவில் சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டியது. இதனால் 1-ம் மைல் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள ஆற்று வாய்க்கால்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் 3 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது.
இதற்கிடையில் கூடலூர் கெவிப்பாரா பகுதியில் தனியார் தோட்டத்தில் மரம் சரிந்து மின்கம்பிகள் மீது விழுந்து மின்தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர். மேலும் கூடலூரில் இருந்து மலப்புரம் செல்லும் சாலையில் கீழ்நாடுகாணி பகுதியில் பல்வேறு இடங்களில் மலைப்பாங்கான பகுதியில் இருந்து சிறிய பாறைகள் உருண்டு விழுந்தது.
இதனால் சரக்கு வாகன டிரைவர்கள் மிகுந்த கவனமுடன் செல்ல வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.