கொரோனா தடுப்பு வழிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை
கொரோனா தடுப்பு வழிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி கூறினார்.
குன்னூர்,
கொரோனா தடுப்பு விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம், குன்னூர் வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு குன்னூர் உதவி கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி தலைமை தாங்கினார். போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ்குமார், நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க வணிகர்கள், கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. பின்னர் உதவி கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி பேசியதாவது:-
மார்க்கெட்டுகளில் பொருட்களை வாங்க வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வியாபாரிகள் அறிவுறுத்த வேண்டும். ஒவ்வொரு கடையின் முன்பும் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
இந்த வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பலகைகள் வைக்க வேண்டும். அதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதில் குன்னூர் வியாபாரிகள் சங்க தலைவர் பரமேஸ்வரன், கோத்தகிரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் விவேகானந்தன் மற்றும் கோவில் நிர்வாகிகள், தேவாலய ஆயர்கள், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், ஆட்டோ டிரைவர்கள் கலந்து கொண்டனர்.