குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பராமரிப்பு பணி மும்முரம்

2-வது சீசனுக்காக குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பராமரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2021-07-06 16:19 GMT
குன்னூர்,

மலைப்பிரதேசமான நீலகிரி மாவட்டம், மிகச்சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசனும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2-வது சீசனும் நிலவுகின்றது. அப்போது கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இதையொட்டி சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும்.

ஆனால் கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக கோடை விழா ரத்து செய்யப்பட்டு விட்டது. தற்போது கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளதால், சுற்றுலா பயணிகள் வர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனாலும் சுற்றுலா தலங்கள் திறக்கப்படவில்லை. எனினும் விரைவில் அவை திறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் தோட்டக்கலைத்துறையின் கீழ் குன்னூரில் செயல்பட்டு வரும் சிம்ஸ் பூங்காவில், வருகிற 2-வது சீசனுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு 27 வகை கொண்ட 1 லட்சத்து 70 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக அவை விதைக்கப்பட்டு, நர்சரியில் வளர்க்கப்பட்டு வருகின்றன. விரைவில் பூங்காவில் நடவு செய்யப்பட உள்ளன. மேலும் மலர் செடிகளை நட பாத்திகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் அலங்கார செடிகள் உள்பட பூங்காவில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களையும் தயார்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்