செங்கல்பட்டு அரசு தோட்டக்கலை பண்ணையில் கலெக்டர் ஆய்வு விளைவிக்கப்பட்ட மாம்பழ வகைகளை பார்வையிட்டார்

செங்கல்பட்டு அரசு தோட்டக்கலை பண்ணையில் கலெக்டர் ஆய்வு செய்து, அங்கு விளைவிக்கப்பட்ட மாம்பழ வகைகளை பார்வையிட்டார்.

Update: 2021-07-06 05:18 GMT
செங்கல்பட்டு,

செங்கல்பட்டு அடுத்த ஆத்தூரில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையை செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ரகுநாத் பார்வையிட்டார். அப்போது அவர், பண்ணையிலுள்ள நிழல்வலை குடில், மா வேர்செடி உற்பத்தியையும், பண்ணை நாற்றங்காலில் உற்பத்தி செய்யப்படும் தென்னை, மா, கொய்யா, மற்றும் அழகு பூச்செடிகளையும் பார்வையிட்டார்.

பின்னர் தேன் உற்பத்தி செய்யப்படும் தேன் பெட்டிகள் மற்றும் மண்புழு உற்பத்தி கூடாரங்களை ஆய்வு செய்து விட்டு, பண்ணையில் விளைவிக்கப்பட்ட மாம்பழ வகைகளையும் பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து, அங்கு விளைவிக்கப்பட்ட கத்தரி மற்றும் மிளகாய் குழித்தட்டு நாற்றுகள், கொய்யா பதியன்களை பயனாளிகளுக்கு கலெக்டர் வழங்கினார்.

மேலும், பழம் பதனிடும் கட்டிட பகுதிகளை பார்வையிட்ட அவர், இங்கு உற்பத்தி செய்யும் பழ ஜாம் பாட்டில்களை சந்தைப்படுத்த விற்பனைக் கூடங்கள் மூலமாகவும், மகளிர் குழுக்கள் மூலமாகவும், தொழில் முனைவோர் மூலமாகவும் விற்பனை செய்ய அறிவுரை வழங்கினார்.

அறிவுரை

அரசு பண்ணையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை நிரந்தரமாக போக்க பாலாற்றில் இருந்து தண்ணீர் கொண்டுவர அறிவுரைகளையும் வழங்கிய அவர், அரசு தோட்டக்கலைப் பண்ணையை மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ஆலோசித்து செயல் திட்டம் தீட்டும்படி அறிவுறுத்தினார்.

இதனை அடுத்து பண்ணையில் செண்பக மரக்கன்று ஒன்றினையும் மாவட்ட கலெக்டர் நட்டு வைத்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை, வேளாண்மை இணை இயக்குனர் சுரேஷ், தோட்டக்கலை துணை இயக்குனர் சாந்தா செலின் மேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்