பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம்: தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து தே.மு.தி.க.வினர் சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-07-05 22:46 GMT
சேலம்:
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட தே.மு.தி.க. சார்பில்  கலெக்டர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தே.மு.தி.க. கொள்கை பரப்பு செயலாளர் ஆர்.மோகன்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் ராதாகிருஷ்ணன் (மாநகர்), இளங்கோவன் (கிழக்கு), சுரேஷ்பாபு (மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத மற்றும் கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் டாஸ்மாக் கடையை திறந்து மக்களை துன்புறுத்தும் தமிழக அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தின் போது கியாஸ் சிலிண்டர் மற்றும் மொபட்டுக்கு மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தி நின்றனர். ஆர்ப்பாட்டத்தில் செவ்வாய்பேட்டை பகுதி செயலாளர் ஆறுமுகம், 29-வது வார்டு செயலாளர் ஸ்ரீதர் உள்பட பலர் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்