சேலம் மாவட்டத்தில் 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன

சேலம் மாவட்டத்தில் நேற்று 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.

Update: 2021-07-05 22:26 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.
பஸ்கள் இயக்கம்
கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை 6 மணி முதல் பஸ்கள் இயக்கப்பட்டன. சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து சேலம் புதிய பஸ் நிலையம், ஜங்சன் ரெயில் நிலையம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், இளம்பிள்ளை, மல்லூர், ஆட்டையாம்பட்டி, ஓமலூர், தாரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 180 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன.
இதேபோல் புதிய பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, கோவை, திருப்பூர், தஞ்சை, திருவாரூர், விழுப்புரம், சென்னை, கடலூர், தர்மபுரி, நாமக்கல், ஓசூர் உள்ளிட்ட ஊர்களுக்கும் விரைவு பஸ்கள் இயக்கப்பட்டன. மொத்தம் 240 விரைவு பஸ்கள் இயக்கப்பட்டன. முககவசம் அணிந்து வந்த பயணிகள் மட்டும் பஸ்சில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். கிருமி நாசினி மூலம பயணிகள் கைகளை சுத்தம் செய்தனர். கொரோனா விதிகள் பின்பற்றப்படுகிறதா? என சேலம் புதிய பஸ் நிலையத்தில் சேலம் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
60 சதவீத பஸ்கள் இயக்கம்
இதுகுறித்து நிர்வாக இயக்குனர் மோகன் கூறுகையில், சேலம் மண்டலத்துக்கு உட்பட்ட சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் 60 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. அதாவது 300 டவுன் பஸ்களும், 360 விரைவு பஸ்களும் இயக்கப்பட்டன. பயணிகள் வருகைக்கு ஏற்ப கூடுதலாக பஸ்கள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் டிரைவர்கள், கண்டக்டர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. டவுன் பஸ்களில் அரசு அறிவித்தபடி பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்றார். மாவட்டத்தில் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்பதால் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்