42 நாட்களுக்கு பிறகு உழவர் சந்தைகள் திறப்பு காய்கறி வரத்து குறைந்தது

கடந்த 42 நாட்களுக்கு பிறகு மாவட்டத்தில் உழவர் சந்தைகள் நேற்று திறக்கப்பட்டன. முதல் நாள் என்பதால் காய்கறி வரத்து குறைவாக இருந்தது.

Update: 2021-07-05 21:52 GMT
கடலூர், 

புதிய தளர்வுகள்

கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் கடந்த மே மாதம் 24-ந்தேதி முதல் 2 வாரத்திற்கு தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு நோய்த்தொற்று குறைந்து வந்ததால் கடந்த மாதம் 7-ந்தேதி முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு வார வாரம் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தற்போது வருகிற 12-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதில் புதிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் நோய் பரவல் அதிகரித்து வந்த நிலையில், கடந்த மே மாதம் 24-ந்தேதி முதல் உழவர் சந்தைகளை மூடப்பட்டன. அதன்பிறகு திறக்கப்படவில்லை.

உழவர் சந்தைகள் திறப்பு

இந்நிலையில் உழவர் சந்தைகளை திறக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். அதன்படி கடந்த 42 நாட்களுக்கு பிறகு கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கடலூர், பண்ருட்டி, வடலூர், சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் ஆகிய உழவர் சந்தைககள் நேற்று திறக்கப்பட்டன.
 கடலூரில் உழவர் சந்தைகள் காலை 6 மணிக்கு திறக்க வேண்டும் என்றாலும் அதிகாலை 5 மணிக்கு முன்னதாகவே விவசாயிகள் காய்கறிகள், பழங்களை கொண்டு வந்து காத்திருந்தனர்.
பின்னர் 6 மணிக்கு உழவர் சந்தை திறந்ததும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து வியாபாரம் செய்தனர். அவர்களுக்கு உழவர் சந்தை அதிகாரிகள், நோய் பரவலை தடுக்க கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். தங்கள் இருப்பிடத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் போன்ற அரசின் வழிகாட்டு விதிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிட்டனர்.

காய்கறி வரத்து குறைவு

ஆனால் ஊரடங்கு தளர்வில் நேற்று உழவர் சந்தை திறக்கப்பட்டதால், காய்கறி வரத்து குறைவாக இருந்தது. வழக்கமாக 25 டன் வரை காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படும். ஆனால் நேற்று 15 டன் அளவுக்கு காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் பொதுமக்கள் வருகையும் குறைவாக இருந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்