வீட்டில் தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை
வீட்டில் தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே உள்ள ஓகளூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லலிதா(வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 10 மாதத்தில் வீரராகவன் என்ற ஆண் குழந்தை உள்ளது. தற்போது லலிதா 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். கடந்த 2-ந் தேதி அருண்குமார் சென்னையில் இருந்து விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அருண்குமார் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்ததால் கதவை தட்டியுள்ளார். வெகுநேரமாக கதவை திறக்காததால் அருண்குமார் கதவிற்கு மேல் ஏறி குதித்து உள்ளே சென்று பார்த்தபோது லலிதா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவரை மீட்டு, லப்பைகுடிகாட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு லலிதாவை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். பின்னர் தனியார் ஆம்புலன்சில் ஒகளூர் வந்து வீட்டில் லலிதாவின் உடலை, அருண்குமார் வைத்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் அங்கு வந்து, லலிதாவின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் வழக்குப்பதிவு செய்துள்ளார். திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால், இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் கோட்டாசியர் மேல் விசாரணை நடத்த உள்ளார்.