டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற வாலிபர்
குமரி மாவட்ட டாஸ்மாக் கடையில் கள்ளநோட்டை மாற்ற முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கொல்லங்கோடு,
குமரி மாவட்ட டாஸ்மாக் கடையில் கள்ளநோட்டை மாற்ற முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
மதுக்கடை
குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே ஊரம்பு பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு நேற்று மாலை ஒரு வாலிபர் மது வாங்க வந்தார். அவர் 500 ரூபாய் நோட்டை கொடுத்து உயர்ரக மது கேட்டுள்ளார்.
ஆனால் அவர் கொடுத்த ரூபாய் நோட்டு மீது ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே ஊழியர்கள் அதை பரிசோதனை செய்து பார்த்த போது கள்ள நோட்டு என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். அதே சமயத்தில் அவர் திடீரென அங்கிருந்து தப்பி ஓடினார். சுதாரித்துக் கொண்ட ஊழியர்கள் விரட்டிச் சென்று பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து, கொல்லங்கோடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கேரளாவை சேர்ந்தவர்
போலீசார் அவரை சோதனையிட்ட போது, அவரிடம் ேமலும் சில கள்ள ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. பின்னர் நடத்திய விசாரணையில், அவர் கேரள மாநிலம் பொழியூரை சேர்ந்த பைஜூ (வயது 32) என்பதும், கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த வாலிபரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.3,500 மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் இவருக்கு கள்ள நோட்டு எங்கிருந்து கிடைத்தது, இவருக்கும் கள்ள நோட்டு கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.