கோவில் அருகே மீன் மார்க்கெட் அமைக்க பா.ஜனதா, இந்து முன்னணி எதிர்ப்பு
கோவில் அருகே மீன் மார்க்கெட் அமைக்க பா.ஜனதா, இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மலைக்கோட்டை
திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இயங்கி வரும் மீன் மார்க்கெட் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்படுவதால் இ.பி.ரோடு பகுதியில் உள்ள பூலோகநாதர் கோவில் எதிர்புறம் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திற்கு தற்காலிகமாக மாற்றம் செய்ய பணிகள் நடைபெற்று வந்தது. அந்த இடத்தில் மீன் மார்க்கெட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி, பா.ஜ.க. மற்றும் சிவனடியார்கள் தரப்பில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு ஏற்கனவே மனு கொடுத்திருந்தனர். இதன் காரணமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த இடத்தில் மீண்டும் பணி தொடங்கியதையடுத்து இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். இதுதொடர்பாக நேற்று மாலை திருச்சி கிழக்கு தாலுகா அலுவலகத்தில் மீன் மார்க்கெட் பிரச்சினைக்கு தீர்வுகாண அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது. இதில் திருச்சி கிழக்கு தாசில்தார் குகன், மாநகராட்சி செயற்பொறியாளர் சிவபாதம், உதவி செயற்பொறியாளர் லோகநாதன், அரியமங்கலம் கோட்ட உதவி ஆணையர் கமலக்கண்ணன், கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் தரப்பில் பா.ஜ.க. பாலக்கரை மண்டல தலைவர் ராஜசேகரன், பொதுச்செயலாளர் மல்லி செல்வம், மண்டல மகளிரணி செயலாளர் கவிதா மோகன், இந்து முன்னணி மாநகர மாவட்ட செயலாளர்கள் சுரேஷ்பாபு, ஜீவரத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இன்று(செவ்வாய்க்கிழமை) பிரச்சினைக்குரிய இடத்தை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரை தற்காலிகமாக பணிகளை நிறுத்தி வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணியினர் கலைந்து சென்றனர்.