ஊரடங்கு தளர்வுகளால் வாகன போக்குவரத்து அதிகரிப்பு: நெல்லையில் இயல்பு நிலைக்கு திரும்பிய பொதுமக்கள்

நெல்லையில் ஊரடங்கு தளர்வுகளால் இயல்பு நிலைக்கு பொது மக்கள் திரும்பி உள்ளனர். இதனால் சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட்டனர்.

Update: 2021-07-05 19:14 GMT
நெல்லை:
நெல்லையில் ஊரடங்கு தளர்வுகளால் இயல்பு நிலைக்கு பொது மக்கள் திரும்பி உள்ளனர். இதனால் சாலைகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட்டனர்.

இயல்பு நிலை

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் பொதுமக்கள் அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்லாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.
இந்த நிலையில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த வாரம் முதல் மீண்டும் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று முதல் ஊரடங்கில் மேலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ், இ-பதிவு எதுவும் தேவையில்லை. கடைகள் திறந்து இருக்கும் நேரம் அதிகரிக்கப்பட்டது.

அனைத்து கோவில்களும் நேற்று வழிபாட்டுக்கு திறக்கப்பட்டது. இதனால் நேற்று பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். அவர்கள் வழக்கம்போல் தங்களது அன்றாட பணியை மேற்கொண்டனர். நெல்லை மாவட்டத்தில் நேற்று பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. 

ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிட்டனர்

ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட நேற்று முதல் அனுமதி அளிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லையில் உள்ள ஓட்டல்களில் வாடிக்கையாளர்களை வரவேற்று உபசரிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து தேவையான உணவு பொருட்களை கேட்டு வாங்கி ருசித்து சாப்பிட்டனர்.
டீக்கடைகளில் வாடிக்கையாளர்கள் டீயை தம்ளர்களில் வாங்கி, அங்கேயே நின்று குடித்தார்கள்.

போக்குவரத்து நெரிசல்

நெல்லை மாநகரில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு அனைத்து தரப்பினரும் பல்வேறு இடங்களுக்கு பயணித்து வருகிறார்கள். பஸ் தவிர தங்களது சொந்த வாகனங்கள் மற்றும் வாடகை வாகனங்களிலும் செல்கிறார்கள்.

இதனால் நேற்று நெல்லையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக நெல்லை டவுன் வழுக்கோடை, டவுன் ரதவீதிகள், வண்ணார்பேட்டை ரவுண்டானா, முருகன்குறிச்சி, மார்க்கெட், சமாதானபுரம், பாளையங்கோட்டை பஸ் நிலையம், பெருமாள்புரம் தற்காலிக பஸ் நிலைய பகுதிகளில் நேற்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களில் குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டு அவை மூடப்பட்டாலும் அதன் அருகில் பாதுகாப்புக்காக இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டு உள்ளன. சாலைப்பகுதி குறுகி விட்டதாலும் வாகனங்கள் அதிகரிப்பாலும் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதை தவிர்க்க சாலைகளை சீரமைப்பதுடன், தேவையான இடங்களில் சாலைகளை அகலப்படுத்த வேண்டும். புதிய இணைப்பு சாலைகளை உருவாக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்