பெரப்பஞ்சோலை கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை அமைச்சர் மதிவேந்தன் பேட்டி
பெரப்பஞ்சோலை கிராமத்தில் செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை அமைச்சர் மதிவேந்தன் பேட்டி
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சி அருகே பெரப்பஞ்சோலை கிராமத்தில் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பை கவனிக்க வசதியாக தற்காலிகமாக செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.
கொரோனா நிவாரணம்
நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண உலர் உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி, பட்டுவளர்ச்சி துறையின் சார்பில் பட்டு விவசாயிகளுக்கு பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமை தாங்கினார். சின்ராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 4 ஆயிரத்து 553 புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.23 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலான கொரோனா நிவாரண உலர் உணவு பொருட்கள் மற்றும் பட்டுவளர்ச்சி துறையின் சார்பில் 35 பட்டு விவசாயிகளுக்கு ரூ.18.37 லட்சம் மதிப்பிலான பட்டுப்புழு வளர்ப்பு தளவாடங்கள் மற்றும் பண்ணை உபகரணங்களை வழங்கினார்.
இ-பதிவு தேவையில்லை
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு இ-பதிவு இல்லாமல் போகலாம். அதே நேரத்தில் 50 சதவீத நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சுற்றுலா பயணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்படும். உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். நீர்வீழ்ச்சிக்கு செல்ல 50 சதவீத பேர் அனுமதிக்கப்படுவார்கள்.
நீலகிரி மாவட்டம் ஊட்டியை பொறுத்தவரையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. பராமரிப்பு பணி நிறைவடைந்த பிறகு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்,
ராசிபுரம் தொகுதிக்குட்பட்ட பெரப்பஞ்சோலை பகுதி மலைப்பகுதியாக இருப்பதால் செல்போன் சிக்னல் கிடைக்காததால் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாமல் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முள்ளுக்குறிச்சியில் தான் செல்போன் கோபுரம் உள்ளது. பொதுவாக செல்போன் கோபுரத்தில் இருந்து 5 கி.மீட்டர் சுற்றளவு மட்டுமே சிக்னல் கிடைக்கும். ஆனால் பெரப்பஞ்சோலை கிராமம் 8 கி.மீட்டர் தொலைவில் உள்ளது. பூஸ்டர் வைத்தாலும் ஓரிரு கி.மீட்டர் வரை மட்டுமே சிக்னல் கிடைக்கும்.
செல்போன் கோபுரம்
எனவே மாணவர்களின் ஆன்லைன் வகுப்பை கருத்தில் கொண்டு உடனடியாக ஒரு செல்போன் கோபுரம் அமைக்க பி.எஸ்.என்.எல். மற்றும் தனியார் தொலைதொடர்பு நிறுவனத்திடம் பேசி வருகிறோம். மேலும் நிரந்தரமாக அங்கு செல்போன் கோபுரம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையாளர் சங்கர் (அமலாக்கம்), தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் துணை இயக்குனர் சீனிவாசன், பட்டு வளர்ச்சித்துறை மண்டல துணை இயக்குனர் சந்திரசேகரன், உதவி இயக்குனர் முத்துப்பாண்டியன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.