ஜமீன்ஊத்துக்குளி கிருஷ்ணா குளத்தில் குப்பைகளை கொட்டினால் நடவடிக்கை

ஜமீன்ஊத்துக்குளி கிருஷ்ணா குளத்தில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தெரிவித்துள்ளார்.

Update: 2021-07-05 17:17 GMT
பொள்ளாச்சி

ஜமீன்ஊத்துக்குளி கிருஷ்ணா குளத்தில் குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் தெரிவித்துள்ளார்.

ஆய்வு

பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன்ஊத்துக்குளி குளத்திற்கு மழையின் மூலம் நீர்வரத்து உள்ளது. இதற்கிடையில் நகராட்சி பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குளத்தில் கலக்கிறது. இந்த நிலையில் கழிவுநீருடன் குப்பைகளும் சேர்ந்து குளத்திற்கு வருகிறது. இதனால் குளத்தில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.

இந்த நிலையில் கிருஷ்ணா குளத்தினை சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் குளத்தில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 ஆய்வின் போது சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் தணிகவேல், வருவாய் துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர். இதுகுறித்து சப்-கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

கழிவுநீருடன் குப்பைகள் சேர்ந்து குளத்திற்கு வருகிறது. இதை தடுக்க பாலத்தின் கீழ் பகுதியில் 3 அடுக்குகளில் இரும்பு கம்பிகள் வைக்க வேண்டும். கம்பிகளில் சிக்கி கிடக்கும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை தினமும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குளத்தை தூர்வாரி குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும்.

குப்பைகள் கொட்டுவதை தடுக்க கரையோரங்களில் விழிப்புணர்வு பதாகைகளை வைக்க வேண்டும். விதிகளை மீறி குளத்தில் குப்பைகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குளத்தை ஆழப்படுத்துவது குறித்து விவசாயிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்