ஆசிரம ஊழியர் கைது

புலித்தோல் பதுக்கிய வழக்கில் ஆசிரம ஊழியர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-07-05 16:50 GMT
நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள வீலிநாயக்கன்பட்டி பகுதியில் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, புலித்தோல் பதுக்கி வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 அதன்பேரில் வத்தலக்குண்டு வனச்சரக அதிகாரி ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் ஆசிரமத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். 

அப்போது, ஆசிரம வளாகத்தில் உள்ள ஒரு வீட்டின் பீரோவில் புலித்தோல், புள்ளி மான் தோல், மயில் தோகைகள் மற்றும் கருங்காலி கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

 அவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆசிரம ஊழியர் பாலசுப்பிரமணியை (வயது 47) கைது செய்தனர்.

பின்னர் அவர், நிலக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு மும்தாஜ் உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் அவர், திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக ஆசிரமத்தின் நிறுவனரிடம் விசாரணை நடத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்