2 மாதங்களுக்கு பிறகு வழிபாட்டு தலங்கள் திறப்பு
தேனி மாவட்டத்தில் 2 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டன.
தேனி:
வழிபாட்டு தலங்கள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வழிபாட்டு தலங்கள், மால்கள், தியேட்டர்கள் ஆகியவை கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி மூடப்பட்டன. கோவில்களில் பூஜைகள் மட்டும் நடந்தன. ஆனால், பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டன.
தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இடைப்பட்ட சில வாரங்கள் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமலில் இருந்தது. பின்னர் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளதால், வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி அளித்தது. இதனால் பக்தர்களுக்காக வழிபாட்டு தலங்கள் நேற்று திறக்கப்பட்டன. மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில், பெரியகுளம் பாலசுப்பிரமணியசாமி கோவில், மாவூற்று வேலப்பர் கோவில், கம்பம் கம்பராயப்பெருமாள் கோவில், கம்பம் கவுமாரியம்மன் கோவில், உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோவில், தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோவில், குச்சனூர் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் உள்ளிட்ட கோவில்கள் நேற்று காலையில் திறக்கப்பட்டன.
அதுபோல், மாவட்டம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கோவில்களும், தனியார் கோவில்களும் திறக்கப்பட்டு இருந்தன. பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் போன்ற வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன.
வெறிச்சோடின
கோவில்கள் திறக்கப்பட்டதால் கோவில் வளாகங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பக்தர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். ஆனாலும், சிலர் முக கவசம் அணியாமல் வந்தனர். சிலர் கருவறை அருகில் வந்ததும் முக கவசத்தை கழட்டிவிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
2 மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்ட போதிலும் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் இல்லை. கோவில் வளாகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. வழக்கமாக வெள்ளி, செவ்வாய், சனி ஆகிய கிழமைகளில் கோவில்களில் கூட்டம் அதிகஅளவில் காணப்படும். எனவே, வரும் நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதேபோல், ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்ததால் கடைகள் இரவு 8 மணி வரை செயல்பட்டன. ஓட்டல்களில் 50 சதவீத இருக்கைகளில் அமர்ந்து மக்கள் சாப்பிட அனுமதிக்கப்பட்டனர். டீக்கடைகளிலும் 50 சதவீத வாடிக்கையாளர்கள் டீ குடிக்க அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் நேற்று உழவர்சந்தைகள் திறக்க அரசு அனுமதியளித்தது. அதன்படி கம்பம் உழவர் சந்தை திறக்கப்பட்டு காய்கறி விற்பனை நடைபெற்றது. கம்பம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் ஏராளமானோர் வந்து காய்கறிகளை வாங்கி சென்றனர்.