நாடு முழுவதும் நதிகளை இணைக்க வேண்டும் என்று உழவர் உழைப்பாளர் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

நாடு முழுவதும் நதிகளை இணைக்க வேண்டும் என்று உழவர் உழைப்பாளர் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2021-07-05 16:40 GMT
பல்லடம்
நாடு முழுவதும் நதிகளை இணைக்க வேண்டும் என்று உழவர் உழைப்பாளர் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 அஞ்சலி கூட்டம்
 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைமை அலுவலகமான உழவாலயத்தில் விவசாய போராட்ட தியாகிகளுக்கு நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். மாநில செயலாளர்கள் திருநாவுகரசு, ஈஸ்வரன், மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். 
இந்த கூட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த விவசாய தியாகிகளின் குடும்பத்திற்கு சுதந்திர போராட்ட தியாகிகள், மொழிபோர் தியாகிகளுக்கு வழங்கப்படுவது போல் மாதம் தோறும் ஒய்வூதியத்தை அரசு வழங்க வேண்டும். விவசாயத்திற்கு என்று தமிழக அரசு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யவிருப்பது வரவேற்க்கதக்கது ஆகும். விவசாயிகளுக்கு என்ன தேவை, என்ன பிரச்சினைகள் உள்ளன என்பது குறித்து தமிழக முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
மும்முனை மின்சாரம் 
நாமக்கல் பகுதியில் 4 மணி நேரம் மட்டுமே விவசாயத்திற்கு கிடைக்கிறது. அதே போல் மாநிலம் முழுவதும் சீரான மும்முனை மின்சார வினியோகம் இல்லை. அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இக்குறைகளை போக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாய இலவச மின் இணைப்பு கேட்டு ஆண்டு கணக்கில் காத்திருக்கும் விவசாயிகளுக்கு உடனடி மின் இணைப்பு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் உழவர் சந்தைகளை திறந்தது போல்கால்நடை சந்தையை திறக்க வேண்டும். விவசாயம் சார்ந்த தொழில்களான கோழிப்பண்ணை, விசைத்தறி தொழில் புரிவோர் பெற்ற கடனுக்கு வட்டியை தள்ளுபடி செய்து அசல் தொகையை செலுத்த நீண்ட கால அவகாசம் வழங்க வேண்டும்.
நதிகளை இணைக்க வேண்டும்
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல அவர்கள் அடகு வைத்துள்ள நகைகளை அவர்களுக்கு உடனடியாக திரும்பி வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற மற்ற வங்கிகளில் தடையில்லா சான்று பெற்று வர அறிவுறுத்தப்படுகிறது. அந்த விதிமுறையை ரத்து செய்து பழைய முறைப்படி நேரடியாக விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும். 
நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை கேரளா அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி நிறைவேற்ற வேண்டும்என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 
கூட்டத்தில் மாநில இளைஞர் அணி செயலாளர் காடாம்பாடி கணேசன், ஊடக பிரிவு செயலாளர் ஈஸ்வரன், மாநில மகளிர் அணி தலைவர் ராஜரீகா, செயலாளர் சங்கீத பிரியா, மாவட்டத்தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்