திருப்பூரில் நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

திருப்பூரில் நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

Update: 2021-07-05 16:38 GMT
திருப்பூர், 
திருப்பூரில் நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.
கோவில்கள் திறக்க அனுமதி
கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மே மாதம் 10-ந்தேதி முதல் தமிழகத்தில் கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய  தடை விதிக்கப்பட்டது. அதேபோல பொது போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று குறைய, குறைய தளர்வுகளும் அறிவிக்கப்பட்டன.
இந்த தளர்வுகளின்படிதற்போதைய ஊரடங்கு வருகிற 12-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு வழங்கியுள்ளது. அதன்படி கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்யவும், பஸ்களை இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வந்தவுடன் கோவில்கள் மற்றும் போக்குவரத்து கழக பணிமனைகளில் முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டன.
சாமி தரிசனம்
அதன்படி நேற்றுகாலை திருப்பூரில் விஸ்வேஸ்ர சாமிகோவில், பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக கோவில்களுக்கு வந்தவர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டது. இதுபோல் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்ட பிறகு தான் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
இதுபோல் பக்தர்கள் பூஜை பொருட்கள் உள்ளிட்ட எந்த பொருளையும் உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை. பல நாட்களுக்கு பிறகு கோவில்களில் சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். வரிசையாக குறிப்பிட்ட அளவு பக்தர்கள் சீரான இடைவெளியில் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
330 பஸ்கள் இயக்கம்
இந்நிலையில் திருப்பூரில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று காலை முதல் பஸ்கள் இயக்கம் தொடங்கின. தற்போது 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் நேற்று 330 பஸ்கள் இயக்கப்பட்டன. இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சேலம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு 180 பஸ்களும், திருப்பூர் மாவட்டத்திற்குள் 150 பஸ்களும் என மொத்தம் 330 பஸ்கள் இயக்கப்பட்டன.
திருப்பூரில் கோவில்வழி, பழைய பஸ் நிலையம், யுனிவர்சல் தியேட்டர் பகுதி, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்பட்ட பஸ்களில், பயணிகள் மகிழ்ச்சியாக பயணம் மேற்கொண்டனர். முன்னதாக பஸ் பயணிகள் அனைவரையும் முககவசம் அணியும் படி டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் வலியுறுத்தினர். சமூக இடைவெளியை பின்பற்றி அரசு பஸ்களும் இயக்கப்பட்டன.

மேலும் செய்திகள்