வழிபாட்டு தலங்கள் திறப்பு
நீலகிரி மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. அங்கு உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. அங்கு உடல் வெப்ப பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
வழிபாட்டு தலங்கள்
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நேற்று முதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்தது. அதில் அனைத்து வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது.
ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் மூடப்பட்டு இருந்தன. ஊரடங்கு தளர்வை தொடர்ந்து அந்த வழிபாட்டு தலங்கள் சுத்தம் செய்யப்பட்டு நேற்று முதல் திறக்கப்பட்டது.
உடல் வெப்ப பரிசோதனை
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊட்டி மாரியம்மன் கோவில், பொக்காபுரம் மாரியம்மன் கோவில், மேல்கூடலூர் சந்தக்கடை மாரியம்மன் கோவில் உள்பட 17 கோவில்கள் திறக்கப்பட்டன. இதுவரை ஊரடங்கால் சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதி அடைந்தனர்.
நேற்று முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். உடல் வெப்ப பரிசோதனை செய்து, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பின்னர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
குறைந்த நபர்கள் மட்டும் குறிப்பிட்ட இடைவெளியில் அனுமதிக்கப்பட்டு, ஒரு வழியாக சென்று மற்றொரு வழியாக திரும்பும் வகையில் தடுப்புகள் போடப்பட்டு இருந்தது. திருநீறு எடுத்து நெற்றியில் பூசிக் கொள்ளும் வகையில் தனியாக தட்டில் வைக்கப்பட்டது. பூ போன்ற பூஜை பொருட்கள் வழங்க அனுமதி மறுக்கப்பட்டது.
தொழுகை
இதேபோல் ஊட்டி சேரிங்கிராசியில் உள்ள தூய இருதய ஆண்டவர் உள்பட தேவாலயங்களில் நேற்று காலை பிரார்த்தனை நடந்தது. இதில் கலந்து கொண்ட கிறிஸ்தவர்கள் சமூக இடைவெளி விட்டு இருக்கைகளில் அமர்ந்து இருந்தனர். முன்னதாக உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்த பின்னர் அனுமதிக்கப்பட்டனர். பள்ளிவாசல்களில் திறக்கப்பட்டு, தொழுகை நடந்தது.
கூடலூரில் சக்தி விநாயகர், புத்தூர்வயல் மகாவிஷ்ணு, பொன்னானி மகாவிஷ்ணு, பந்தலூரில் முருகன், எருமாடு சிவன் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக பக்தர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் முகக்கவசம் அணிந்தவாறு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆனால் பிரசாதங்கள் வழங்கப்படவில்லை.