தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் வீடுகளில் திருட்டு முயற்சி

பெரம்பலூரில் தலைமை ஆசிரியர் உள்பட 3 பேர் வீடுகளில் அடுத்தடுத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் நகை- பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.

Update: 2021-07-04 20:49 GMT
பெரம்பலூர்:

திருட்டு போகவில்லை
பெரம்பலூர் 8-வது வார்டு துறைமங்கலம் விவேகானந்தர் நகர் 2-வது தெருவில் வசிப்பவர் ஜெய்சங்கர் (வயது 43). இவர் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஜெய்சங்கர் தனது வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான வேப்பந்தட்டை தாலுகா தழுதாழையில் உள்ள பெற்றோர் வீட்டில் கடந்த 1½ மாதங்களாக குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
அவர் அவ்வப்போது பெரம்பலூரில் உள்ள வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை அந்த வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
ஆசிரியர் வீட்டிலும்...
இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக ஜெய்சங்கருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த ஜெய்சங்கர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் உள்ளிட்ட எதுவும் திருட்டு போகாததால் நிம்மதியடைந்தார்.
இதேபோல் ஜெய்சங்கர் வீட்டின் அருகே வசிக்கும் கிழுமத்தூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் வேதியியல் ஆசிரியரான செல்வராஜும் (50) வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் பாலையூர் கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் கடந்த ஒரு மாதமாக வசித்து வருகிறார். அவரது வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு, அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த துணிகள், பொருட்கள் கட்டிலில் சிதறி கிடந்தன. ஆனால் அவரது வீட்டிலும் எதுவும் திருட்டு போகவில்லை.
போலீசார் விசாரணை
மேலும் அந்த வீடுகளின் அருகே பாண்டியன் (45) என்பவர் தனது வீட்டில் முதல் மாடியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அதில் கீழே உள்ள வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.ஆனால் எதுவும் திருட்டு போகவில்லை. பாண்டியன், கொளக்காநத்தத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
3 வீடுகளிலும் நகை-பணம் ஏதும் வைக்கப்படாததால் திருட வந்த மர்மநபர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர். ஒரே தெருவில் அடுத்தடுத்து 3 வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்