மின்னல் தாக்கி 2 சினை மாடுகள் செத்தன
பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கி 2 சினை மாடுகள் செத்தன.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூரை சேர்ந்தவர் சேகர் (வயது 53). விவசாயியான இவர் அதே பகுதியில் தான் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வரும் வயலில் உள்ள தொழுவத்தில் நேற்று 2 சினை மாடுகளை கட்டியிருந்தார். இந்த நிலையில் எளம்பலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் நேற்று மதியம் பலத்த மழை பெய்தது. அப்போது தொழுவத்தில் கட்டியிருந்த சினை மாடுகளின் மீது மின்னல் தாக்கியது. இதில் 2 மாடுகளும் பரிதாபமாக செத்தன. இதுகுறித்து தகவலறிந்த எளம்பலூர் கிராம நிர்வாக அலுவலர் சேகர், சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். அப்போது மாட்டின் உரிமையாளர், அரசின் நிவாரண தொகை பெற்றுத்தர கோரிக்கை விடுத்தார். மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி சினை மாடுகள் உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.