கல்வராயன் மலை பகுதியில் 2,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு- தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை
கல்வராயன் மலை பகுதியில் 2,500 லிட்டர் சாராய ஊறலை தனிப்படை போலீசார் அழித்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
சேலம்:
கல்வராயன் மலை பகுதியில் 2,500 லிட்டர் சாராய ஊறலை தனிப்படை போலீசார் அழித்து அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
சாராயம் காய்ச்சி விற்பனை
சேலம் மாவட்டத்தில் உள்ள மலை பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அவ்வப்போது போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து சாராயம் காய்ச்சுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஆத்தூர் கல்வராயன் மலை பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவுக்கு தகவல் கிடைத்தது.
தீவிர சோதனை
இதையடுத்து சாராயம் காய்ச்சுபவர்களை பிடிக்க ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு இம்மானுவேல் ஞானசேகர், தலைவாசல் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை கல்வராயன் மலை பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு இடத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டு இருப்பதை கண்டுபிடித்தனர். அதாவது பேரல்களில் 2,500 லிட்டர் சாராய ஊறல் இருந்தது. அதனை போலீசார் தரையில் கொட்டி அழித்தனர்.
கடும் நடவடிக்கை
தொடர்ந்து ஊறல் போட்டது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், மலைப்பகுதிகளில் சாராயம் காய்ச்சுவது குறித்து அவ்வப்போது புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இனி வரும் காலங்களில் சாராயம் காய்ச்சுவதை கைவிடவேண்டும். மீறி காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.