கல்வி தொலைக்காட்சி குறித்து பெண் வேடமணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி தலைமை ஆசிரியர்
கல்வி தொலைக்காட்சி குறித்து பெண் வேடமணிந்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
கெங்கவல்லி:
கெங்கவல்லி அருகே கடம்பூர் ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளி தலைமையாசிரியராக இருப்பவர் செல்வம். இவர், மாணவ- மாணவிகளுக்கு கல்வி தொலைக்காட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நூதன முறையை கையாண்டார். அதாவது, ஒரு பெண் எப்படி தன்னை அலங்கரித்து கொள்வாளோ, அதேபோன்று தலைமை ஆசிரியர் செல்வம், சேலை கட்டிக்கொண்டதுடன் தன்னை பெண் போல அலங்கரித்துக் கொண்டார். பின்னர் கல்வி தொலைக்காட்சியில் எந்ததெந்த பாடங்கள், எந்தெந்த நேரம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்ற விவரங்கள் அடங்கிய அட்டவணையை வீடு வீடாக சென்று மாணவ- மாணவிகளிடம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இதுகுறித்து தலைமை ஆசிரியர் செல்வம் கூறுகையில், தற்போது கொரோனாவால் மாணவர்கள் பள்ளிக்கு வரமுடியாத சூழல் உள்ளது. இருப்பினும் மாணவர்களின் நலன் கருதி நமது அரசு கல்வி தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்துகிறது. எனவே அதுபற்றிய அட்டவணையை மாணவர்களுக்கு வழங்க முடிவு செய்தேன். மாணவர்களை கவரும் வகையில் பெண் வேடமிட்டு இந்த விழிப்புணர்வு பணியை மேற்கொண்டேன் என்றார். தலைமை ஆசிரியரின் இந்த விழிப்புணர்வு பணியை அந்த ஊர் மக்கள் பாராட்டினர்.