சூறைக்காற்றுடன் பலத்த மழை; மின்கம்பங்கள் சாய்ந்தது
சேரன்மாதேவி, வீரவநல்லூர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்கம்பங்கள் சாய்ந்தது.
சேரன்மாதேவி:
வீரவநல்லூர், சேரன்மாதேவி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் வீரவநல்லூர்-சேரன்மாதேவி மெயின் ரோடு உப்பாற்று காலனி அருகில் உள்ள பழமைவாய்ந்த வேப்ப மரம் திடீரென்று சரிந்து சாலையில் விழுந்தது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் அந்த வழியாக சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோன்று வீரவநல்லூரில் பழைய பாரதியார் பள்ளிக்கட்டிடம் அருகில் நின்ற வேப்ப மரத்தின் கிளை முறிந்து, அங்குள்ள உயர் அழுத்த மின்கம்பிகளில் விழுந்தது. உடனே மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று, சேதமடைந்த மின்கம்பிகளை சீரமைத்தனர். இதனால் அங்கு நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டது.
சூறைக்காற்றின் காரணமாக வீரவநல்லூர், கிளாக்குளம், காருகுறிச்சி, புதுக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 8 மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. இதனால் அப்பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. உடனே மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று, சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.