தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறிவிடும்
பராமரிப்பு பணிகள் முடிந்து தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறிவிடும் என்று நவாஸ்கனி எம்.பி. தெரிவித்தார்.
பரமக்குடி,
பராமரிப்பு பணிகள் முடிந்து தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறிவிடும் என்று நவாஸ்கனி எம்.பி. தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை
ராமநாதபுரம் நவாஸ்கனி எம்.பி. பரமக்குடியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல், கியாஸ், விலை உயர்வால் பொதுமக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டதுபோல் கொரோனா காலம் முடிந்து நிதிநிலை சரியான பின்பு பெட்ரோல், டீசல், விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தி.மு.க.வின் அனைத்து தேர்தல் அறிக்கைகளும் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
பாதிப்பு
பெட்ரோல், டீசல், கியாஸ் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவது வேதனை அளிக்கிறது. மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பிரதமர் மோடி கூறுகிறார். தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் தான் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு எதிர்த்து வருகிறது.
கர்நாடகாவில் பா.ஜ.க.ஆட்சி நடைபெறுகிறது. எனவே இந்த விசயத்தில் மத்திய அரசு தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கிறது. தமிழகத்தில் மின்தடைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதற்காகத்தான் தற்போது அனைத்து பகுதிகளிலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த பணிகள் முடிவடைந்தவுடன் தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறி விடும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது பரமக்குடி எம்.எல்.ஏ.முருகேசன் உடன் இருந்தார்.