கார் மோதி தம்பதி உள்பட 4 பேர் பலி
விக்கிரவாண்டியில் கார் மோதி தம்பதி உள்பட 4 பேர் பலியானார்கள். இந்த விபத்துக்கு காரணமான கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி கக்கன் நகரை சேர்ந்தவர் தயாளன் (வயது 63). ஓய்வுபெற்ற கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க ஊழியர். இவரது மனைவி சந்திரா(55). இவர்கள் 2 பேரும் நேற்று காலை தெற்கு புறவழிச்சாலையில் உள்ள சர்வீஸ் ரோட்டில் நடந்து சென்றனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த விக்கிரவாண்டி ஆகாட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்த பொக்லைன் எந்திர டிரைவர் மணிகண்டன்(33) என்பவரை நிறுத்தி கணவன்-மனைவி இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் சின்னதச்சூர் கிராமத்தை சேர்ந்த செல்வம் (55) என்பவர் தெற்கு புறவழிச்சாலையை கடக்க முயன்றார்.
4 பேர் பலி
அப்போது சென்னையில் இருந்து சேலம் நோக்கி வேகமாக வந்த கார் செல்வத்தின் மீது மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தறிகெட்டு ஓடி இடதுபுறத்தில் 5 அடி பள்ளத்தில் இருந்த சர்வீஸ் ரோட்டில் சீறிப்பாய்ந்து, அங்கு பேசிக்கொண்டிருந்த தயாளன், சந்திரா, மணிகண்டன் ஆகியோர் மீது மோதியது.
இந்த கோர விபத்தில் தயாளன், சந்திரா, செல்வம் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பலத்த காயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மணிகண்டனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டா்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மணிகண்டன் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திரன், விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை நடத்தினர்.
பின்னர் விபத்தில் பலியானவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கார் டிரைவர் கைது
விபத்துக்கு காரணமான கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த ஜெயபால்(39) என்பதும், துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த தனது அக்காள் புஷ்பம், அவரது கணவர் செந்தில்குமார், மகள் அனுப்பிரியா ஆகியோரை காரில் ஆத்தூருக்கு அழைத்து சென்றபோது விபத்து நிகழ்ந்ததும் தெரியவந்தது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. ஆனால் அதில் வந்த டிரைவர் உள்பட 4 பேரும் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான ஜெயபாலை கைது செய்தனர்.