குடும்ப பிரச்சினையில் பெண் உள்பட 3 பேரை கத்தியால் குத்திய போலீஸ்காரர் கைது
குடும்ப பிரச்சினையில் பெண் உள்பட 3 பேரை கத்தியால் குத்திய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
கடமலைக்குண்டு:
குடும்ப பிரச்சினையில் பெண் உள்பட 3 பேரை கத்தியால் குத்திய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.
வரதட்சணை கொடுமை
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள பொன்னன்படுகையை சேர்ந்தவர் சிவராஜா (வயது 38). இவர், கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கும், மயிலாடும்பாறையை சேர்ந்த ஜெயசுதா (23) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1 வயதில் கவிமித்ரன் என்ற மகன் உள்ளான்.
இதற்கிடையே சிவராஜா மற்றும் அவரது தந்தை சின்னசாமி (55), தாய் சரசுவதி (48) ஆகியோர் கூடுதல் வரதட்சணை கேட்டு ஜெயசுதாவை கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜெயசுதா கோபித்து கொண்டு கடந்த மாதம் தனது குழந்தையுடன் மயிலாடும்பாறையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அப்போது ஜெயசுதாவுக்கு அவரது பெற்றோர் ஆறுதல் கூறியதுடன், கணவருடன் சேர்ந்து வாழுமாறு அவ்வப்போது அறிவுரை வழங்கி வந்தனர். இந்தநிலையில் ஜெயசுதா நேற்று மாலை தனது கணவர் வீட்டிற்கு சென்றார். அவருடன் மயிலாடும்பாறையை சேர்ந்த அவரது உறவினர்களான செல்லப்பாண்டி, சண்முகராணி, மதியழகன் ஆகியோரும் சென்றனர்.
3 பேருக்கு கத்திக்குத்து
அப்போது வீட்டில் இருந்து வெளியே வந்த சிவராஜா மற்றும் அவரது பெற்றோர், ஜெயசுதாவை வீட்டிற்குள் வரக்கூடாது என்று கூறி மிரட்டினர். ஆனால் அதனையும் மீறி அவர் வீட்டுக்குள் செல்ல முயன்றார். உடனே ஜெயசுதாவை பிடித்து சிவராஜா வெளியே தள்ளினார்.
இதனால் சிவராஜா குடும்பத்தினருக்கும், ஜெயசுதாவின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன், இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த சிவராஜா, தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செல்லப்பாண்டி, சண்முகராணி, மதியழகன் ஆகிய 3 பேரையும் சரமாரியாக குத்தினார். இதில் அவர்கள் 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.
போலீஸ்காரர் கைது
இதையடுத்து காயம் அடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக சண்முகராணி மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, போலீஸ்காரர் சிவராஜாவை கைது செய்தனர். குடும்ப பிரச்சினையில் 3 பேரை போலீஸ்காரர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.