சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு சீல்; கலெக்டர் முரளிதரன் எச்சரிக்கை
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் முரளிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேனி:
ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் முரளிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஊரடங்கில் தளர்வுகள்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அதற்கேற்றாற்போல் ஊரடங்கிலும் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. ஆனால், பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் அரசு வழிகாட்டு முறைகளை பின்பற்றாமல் உள்ளனர். பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள அலட்சியத்தால் வரும் காலங்களில் நோய்த்தொற்று தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
முக கவசம் அணியாவிட்டால் ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்புவது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது, தனிமைப்படுத்தும் விதிகளை மீறுதல் போன்றவற்றுக்கு ரூ.500, வணிக நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடங்கள், அழகு நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம், கட்டுப்பாட்டு பகுதிகளில் வழிகாட்டு நெறிமுறைகளை மீறும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.5 ஆயிரம், தனி நபருக்கு ரூ.500 என அபராதம் விதிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால்தான் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும்.
கடைகளுக்கு ‘சீல்’
எனவே, பொதுமக்கள் வெளியே செல்லும்போது முக கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வணிக நிறுவனங்களும் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதை கடைபிடிக்க தவறும் நபர்கள் மீது கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், கடைகளில் ஆய்வு செய்யும் போது பொதுமக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தால் சம்பந்தப்பட்ட கடைகளை மூடி ‘சீல்’ வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.