கோவாவில் கர்நாடகத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை

கோவாவில் கர்நாடகத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். திருட்டை ஒப்புக்கொள்ள போலீசார் தொல்லை கொடுத்ததாக கடிதத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

Update: 2021-07-01 21:01 GMT
பெங்களூரு:
  
விஜயாப்புராவை சேர்ந்தவர்கள்

  கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் முத்தேபிகால் தாலுகா சுல்தான்புரா கிராமத்தை சேர்ந்தவர் உலிகப்பா அம்பிகேரா (வயது 35). இவரது மனைவி தேவம்மா (28). உலிகப்பாவின் சகோதரர் கங்கப்பா (29). இவர்கள் 3 பேரும் கோவா மாநிலம் வெர்னா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எம்.இ.எஸ். கல்லூரி அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

  உலிகப்பாவும், கங்கப்பாவும் கூலி வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு உலிகப்பாவின் தங்கி இருந்த வாடகை வீட்டின் உரிமையாளரான சம்சுதீன் என்பவரின் வீட்டில் இருந்து தங்கநகைகள் திருட்டுப் போனது. தனது வீட்டில் புகுந்து தங்கநகைகளை தேவம்மா திருடி சென்றதாக வெர்னா போலீசில் சம்சுதீன் புகார் அளித்ததாக தெரிகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

  இதையடுத்து உலிகப்பா, கங்கப்பா, தேவம்மா ஆகிய 3 பேரையும் வெர்னா போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது தேவம்மா தான் நகைகளை திருடவில்லை என்று கூறியதாக தெரிகிறது. ஆனாலும் நகைகளை திருடியதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று உலிகப்பா, கங்கப்பா, தேவம்மாவுக்கு போலீசார் தொல்லை கொடுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

  பின்னர் 3 பேரையும் போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்து உள்ளனர். இந்த நிலையில் உலிகப்பா, கங்கப்பா, தேவம்மா ஆகிய 3 பேரும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுபற்றி அறிந்த வெர்னா போலீசார் அங்கு சென்று 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடிதம் சிக்கியது

  பின்னர் வீட்டில் இருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் நகை திருடு போன வழக்கிற்கும், எங்களும் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அந்த திருட்டை ஒப்புக்கொள்ள தங்களுக்கு போலீசார் தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் மனம் உடைந்து இந்த முடிவை எடுக்கிறோம் என்று உருக்கமாக எழுதப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றி கொண்டனர். இந்த சம்பவம் குறித்து வெர்னா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு ஆகி உள்ளது.

மேலும் செய்திகள்