கொரோனா தடுப்பு விதிகளை மீறிய எடியூரப்பா
கொரோனா தடுப்பு விதிகளை எடியூரப்பா மீறினார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ஊரடங்கில் தளர்வுகள் செய்த அரசு பல்வேறு வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. அதன்படி திருமண நிகழ்ச்சிகளில் 40 பேர் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மேலும் திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது. ஆனால் கொரோனா தடுப்பு விதிகளை முதல்-மந்திரி எடியூரப்பாவே மீறி உள்ளார்.
அதாவது பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா அருகே குனிகல் சாலையில் உள்ள ரெசார்டில் நேற்று முன்தினம் பா.ஜனதா பிரமுகரின் இல்ல திருமணம் நடந்தது. இதில் கலந்து கொள்ள முதல்-மந்திரி எடியூரப்பா காரில் வந்தார். காாில் இருந்து இறங்கிய அவர் முகக்கவசம் அணியவில்லை. மேலும் அவர் ஒரு கூட்டத்துடன் சேர்ந்து ரெசார்டுக்குள் சென்றார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் எடியூரப்பாவுக்கு எதிராக கருத்துகள் பதிவிட்டு வருகின்றனர். எடியூரப்பா 2 முறை கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டு வந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.