கார் விபத்தில் நடிகர் ஜக்கேசின் மகன் காயம்
கார் விபத்தில் நடிகர் ஜக்கேசின் மகன் காயம் அடைந்தார்.
பெங்களூரு:
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் ஜக்கேஷ். இவர் பா.ஜனதா கட்சியின் பிரமுகரும் ஆவார். ஜக்கேசின் 2-வது மகன் யத்திராஜ். இந்த நிலையில் நேற்று யத்திராஜ் தனது விலையுயர்ந்த காரில் சிக்பள்ளாப்பூர் அருகே அகலகுர்த்தி பகுதியில் பெங்களூரு-ஐதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடி சாலையோர மரத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் யத்திராஜ் காயம் அடைந்தார். இதுபற்றி அறிந்த சிக்பள்ளாப்பூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடததிற்கு சென்று யத்திராஜை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து ஜக்கேஷ் கூறும்போது, எனது மகன் யத்திராஜ் காரில் ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு ேநாக்கி வந்தார். சிக்பள்ளாப்பூர் அருகே அகலகுர்த்தி பகுதியில் சென்ற போது சாலையின் குறுக்கே ஒரு நாய் வந்து உள்ளது. நாய் மீது மோதாமல் இருக்க யத்திராஜ் காரை திருப்பி உள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. இதில் யத்திராஜ் காயம் அடைந்தார். இறைவன் அருளால் அவர் தற்போது நலமாக உள்ளார் என்று கூறினார். இந்த விபத்து குறித்து சிக்பள்ளாப்பூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.