மோட்டார்சைக்கிள் விபத்தில் தலைமை ஆசிரியர் சாவு

புளியங்குடி அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் இறந்தார்.

Update: 2021-07-01 20:13 GMT
புளியங்குடி:
புளியங்குடி வெள்ளையர் தெருவை சேர்ந்தவர் மலர்வண்ணன் (வயது 56). இவர் வாசுதேவநல்லூர் தலையணையில் உள்ள பழங்குடியினர் நல அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் பள்ளியில் இருந்து புளியங்குடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
புளியங்குடி அருகே தனியார் கல்லூரி அருகில் வந்தபோது எதிரே ராயகிரி வடக்கு தெருவை சேர்ந்த குருசாமி மகன் ராஜகுரு (35) என்பவர் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ராஜகுரு மோட்டார் சைக்கிளும், மலர்வண்ணன் மோட்டார்சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மலர்வண்ணன், ராஜகுரு ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியங்குடி போலீசார், 2 பேரையும் மீட்டு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மலர்வண்ணன் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த ராஜகுரு முதலுதவி சிகிச்சைக்குப்பின் மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து புளியங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காசிவிசுவநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்