சின்ன வெங்காயத்தில் நோய் தாக்குதலைத் தவிர்க்க விதை நேர்த்தி உள்ளிட்ட ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறை
சின்ன வெங்காயத்தில் நோய் தாக்குதலைத் தவிர்க்க விதை நேர்த்தி உள்ளிட்ட ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறை
போடிப்பட்டி,
சின்ன வெங்காயத்தில் நோய் தாக்குதலைத் தவிர்க்க விதை நேர்த்தி உள்ளிட்ட ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறைகளைக் கடைபிடிக்க தோட்டக்கலைத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
விதை வெங்காயம்
உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் சின்ன வெங்காயம் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் வேரழுகல், இலைப்புள்ளி நோய் உள்ளிட்ட நோய் தாக்குதல் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் சூழல் உள்ளது. இதனைத்தவிர்க்க தோட்டக்கலைத்துறையினர் வழிகாட்டல்கள் வழங்கியுள்ளனர்.
இதுகுறித்து உடுமலை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
விவசாயிகள் தரமான விதை வெங்காயம் அல்லது வெங்காய விதைகளைப்பயன்படுத்த வேண்டும். வெங்காயம் பயிரிட்டுள்ள வயலைச் சுற்றி தடுப்புப்பயிராக 2 வரிசையில் மக்காச்சோளத்தைப் பயிரிடலாம். மேலும் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 5 மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளையும், வெட்டுப்புழுக்களின் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சிப்பொறிகளையும் வைக்கலாம். நடவு செய்த 40 நாட்களில் அசாடிராக்டின் 1 சதவீதத்தை 10 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
வெட்டுப்புழுக்கள்
அத்துடன் இலைப்பேன் எனப்படும் பூச்சிகள் இலைகளின் சாறினை உறிஞ்சுவதால் வெண் திட்டுக்களாக காணப்படும். இதனை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 80 லிட்டர் தண்ணீரில் மெத்தில் டெமட்டான் 200 மில்லி அல்லது பாஸ்போமிடான் 120 மில்லி கலந்து தெளிக்க வேண்டும்.
மேலும் வெங்காய ஈ எனப்படும் சாம்பல் நிற ஈக்கள் மண்ணிலுள்ள இடுக்குகளில் முட்டையிடும். அதிலிருந்து வெளி வரும் வெள்ளை நிறப்புழுக்கள் வெங்காயப்பயிரின் தண்டுப்பகுதி மற்றும் வெங்காயத்தைக்குடைந்து தின்று அழித்து விடும். இவற்றை 10 லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி மெத்தில் டெமட்டோன் பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம்.
மேலும் வெட்டுப் புழுக்கள் இலைகளை அரித்து சல்லடை போல ஆக்கி விடும். வளர்ந்த புழுக்கள் வெங்காயத் தாள்களை வெட்டி சேதப்படுத்தும். இதனைக் கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீருக்கு குளோர்பைரிபாஸ் 20 மில்லி அல்லது இமாமேக்டின் 4 கிராம் அல்லது புளுபெண்டமைடு 6.5 மில்லி அல்லது இன்டாக்ஸ்கார்ப் 20 மில்லி என்ற அளவில் கலந்து பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம்.மேலும் இலைப்புள்ளி நோயைக்கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் மேன்கோசெப் அல்லது 2 கிராம் ஜீனப் அல்லது 2 கிராம் குளோரோதலனில் கலந்து பயன்படுத்தலாம்.
வேரழுகல் நோய்
அதிகப்படியான மழைப்பொழிவு, அதிக நீர் பாய்ச்சுதல், அதிக ஈரப்பதம் போன்றவற்றின் காரணமாக ஏற்படும் பூஞ்சை தொற்று நோய், வேரழுகல் நோய் அல்லது கோழிக்கால் நோய் மற்றும் திருகல் நோய் என்று விவசாயிகளால் கூறப்படுகிறது. சின்ன வெங்காய சாகுபடியில் விவசாயிகளுக்கு அதிக அளவில் இழப்பை ஏற்படுத்தக்கூடியது இந்த நோய் என்று சொல்லலாம்.
நடவுக்குப் பயன்படுத்தக்கூடிய விதை வெங்காயங்களை தரம் பிரித்து, நோய் தாக்கிய வெங்காயங்களை அகற்றாமல் அப்படியே நடவு செய்யும்போது விதை வெங்காயத்தில் ஒட்டியிருக்கும் பூஞ்சைகள் பல்கிப்பெருகி மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
இந்த நோய் தாக்குதலைத் தவிர்க்க நிலம் தயாரிப்பு முதல் விதைத் தேர்வு வரை ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்த வேண்டும்.மேலும் நடவுக்கு முன் விதை நேர்த்தி செய்வது மிகவும் அவசியமாகும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.