சேவூர் அருகே பாப்பாங்குளம் கிராமம் ஆதாரம் பாளையத்தில் 270 ஆண்டு பழமையான கல்வெட்டுடன் கூடிய கல்தொட்டி கண்டறியப்பட்டுள்ளது.

சேவூர் அருகே பாப்பாங்குளம் கிராமம் ஆதாரம் பாளையத்தில் 270 ஆண்டு பழமையான கல்வெட்டுடன் கூடிய கல்தொட்டி கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2021-07-01 19:58 GMT
சேவூர்
சேவூர் அருகே பாப்பாங்குளம் கிராமம் ஆதாரம் பாளையத்தில் 270 ஆண்டு பழமையான கல்வெட்டுடன் கூடிய கல்தொட்டி கண்டறியப்பட்டுள்ளது.
கொங்கு மண்டலம்
கொங்கு மண்டலமானது கால்நடை மேய்த்தல் தொழிலை முக்கியமான தொழிலாக கொண்டது. சாலைகளில் செல்லும் மாட்டுவண்டிகள், சுமை சுமந்து செல்லும் கழுதைகள், தலைமூட்டையுடன் செல்லும் பாதசாரிகள் போன்ற பயணிகள் இளைப்பாற பெரிய நிழல்தரும் மரங்களும், சாலையோர கிணறுகளும் சுமைதாங்கிக்கற்களும், கொங்கு மண்டல கிராமங்களில் காணப்படும். பட்டி போட்டு மேய்க்கும் குரும்பை ஆடுகள், காடுகளில் மேய்க்கும் வெள்ளாடுகள், கால்நடைகள் ஆகியனவும் உண்டு. 
இவ்வாறு பலவகையான கால்நடை இனங்களுக்கும் தாகம் தணிக்க கிராமச்சாலையோர பொதுக்கிணறுகளின் அருகில் நம் முன்னோர்கள் கல்தொட்டி அமைத்து கால்நடைகளின் தாகம் தீர்க்க ஜீவ காருண்ய சேவை புரிந்துள்ளனர். 
கண்டெடுப்பு
இத்தகைய கல்வெட்டுடன் கூடிய கல்தொட்டி சேவூர் அருகே ஆதாரம்பாளையத்தில் உள்ளது வரலாற்று ஆய்வாளர்கள் முடியரசு, சிவக்குமார், பிரவீன் குமார் ஆகியோரால் கண்டறியப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு குறித்து வரலாற்று ஆய்வாளர் முடியரசு கூறியதாவது:- 
ஆதாரம்பாளையம் பிள்ளையார் கோவில் முன்புறம் இந்த கல்தொட்டி அமைந்துள்ளது. கல்தொட்டியின் பக்கவாட்டில் உள்ள கல்வெட்டில் கலியுக சகாப்தம் என ஆரம்பிக்கிறது. கலியுக சகாப்தம் 4852 என்பது கி.பி. 1751 ஆண்டை குறிப்பதாகும். கல்வெட்டின் எழுத்து அமைந்த முறை மற்றும் ஆண்டு குறிப்பிட்ட முறை கொண்டும் இந்த கல்தொட்டியானது கிட்டத்தட்ட 270 ஆண்டுகள் பழமையானது எனக் கொள்ளலாம்.
கல்வெட்டு வாசகம் வருமாறு:-
கலியுக சகாப்தம் 4852-ஆம் ஆண்டு பங்குனி மாதம் பச்சாக் கவுண்டன் மகள் ஆண்டியம்மாள் நல்கும் சால். அண்ணமார் சாமியருள்" என எழுதப்பட்டுள்ளது. கலியுக சகாப்தம், பங்குனி மாதம் அதாவது 1751-ம் ஆண்டு இத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதை அமைத்தவர் பச்சாக் கவுண்டன் மகள் ஆண்டியம்மாள் என அறியமுடிகிறது. சால் என்பது இங்கு கல்தொட்டியை குறிக்கிறது. ஆண்டியம்மாள் என்ற பெயர் அருகே உள்ள கல்வெட்டு வரி சிதைவுற்று உள்ளதால் கல்தொட்டியை நிறுவிய மேலும் ஓரிரு நபர்களின் பெயர் விடுபட்டு இருக்க வாய்ப்பு உண்டு. கல்வெட்டின் இறுதியாக அண்ணமார் சாமியருள் என முடிகிறது.
கல்தொட்டி
இந்த கல்தொட்டியானது சுமார் 7 அடி நீளமும், 2 அடி அகலமும், 2 அடி உயரமும் கொண்டது. இது ஒரு டன் எடைக்கும் அதிகமாக உள்ளது. கல்லின் 7 அடியுள்ள பக்கவாட்டில் பிற்காலத்தமிழ் எழுத்தமைதி கொண்ட எழுத்துக்களில் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் எழுத்துக்கள் சிதைவுற்றுக் காணப்படுகிறது.
இக் கல்வெட்டு மற்றும் கல்தொட்டி குறித்து தொல்லியல் வரலாற்று அறிஞர் பூங்குன்றன் கூறும்போது “நாயக்கர்கள் ஆட்சிக்குப்பிறகு கல்தொட்டிகள் அமைக்கும் பழக்கம் வந்திருக்க வேண்டும். கொங்கு மண்டலத்தில் இந்த கல்தொட்டிகள் கல்லுப்பண்ணைகள் என்றழைக்கப்பட்டன. கல்வெட்டில் உள்ள கலியுக சகாப்தம் இதன் பழமையை உணர்த்துவதாக உள்ளது” என்றார்.  
வீரக்கல், சதிக்கல், அரிகண்டம், நவகண்டம் போன்ற வீரம் செறிந்த நிகழ்வுகளைக் கடந்து சுமைதாங்கிக்கல், அன்னதானம், கால்நடைகளுக்கு தாகம் தீர்க்கும் கல்தொட்டி, ஊர்ப்பொதுக் கிணறு போன்ற மனித நேயமிக்க செயல்களை பிற்கால கொங்கு வரலாற்றில் அறிய முடிகிறது என்று வரலாற்று ஆய்வாளர் முடியரசு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்