தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்று திரும்பினர்: மீனவர்கள் வலையில் அதிக அளவில் சிக்கிய மீன்கள், நண்டுகள் போதிய விலை இல்லாததால் ஏமாற்றம்
தடைக்காலம் முடிந்து விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் சென்றதால் அதிக அளவில் மீன் வகைகள், நண்டுகள் கிடைத்தன. போதிய விலை இல்லாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கோட்டைப்பட்டினம்:
படகுகள் பழுதுகள் சரிபார்ப்பு
மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந்தேதி வரை 61 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வதில்லை. இதனால் விசைப்படகு மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க மீன்வளத்துறையினரால் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லாமல் தங்கள் படகுகளை கரையில் நிறுத்தி வைத்தனர். மேலும் தடைக்காலத்தில் மீனவர்கள் தங்கள் படகுகளில் உள்ள சிறிய, சிறிய பழுதுகளை சரிசெய்து படகுகளை தயார் படுத்தினர். மீன்பிடி தடைக்காலத்தில் இப்பகுதில் உள்ள அனைத்து மீன் மார்க்கெட்டுகளிலும் மீன்களின் விலை இரட்டிப்பாக அதிகரித்தது. மீன்பிடி சார்ந்த தொழில்களும் முடங்கின.
மீனவர்கள் கடலுக்குள் சென்றனர்
இந்நிலையில் கடந்த ஜூன் 14-ந் தேதியுடன் மீன்பிடி தடைக்காலம் முடிந்து 15-ந்தேதி மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக மீனவர்கள் கடந்த 15-ந்தேதி கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை.
மேலும் கொரோனா தொற்று குறைந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் நேற்று முன்தினம் தங்கள் விசைப்படகுகளில் டீசல், ஐஸ் பார் மற்றும் மீன்பிடி சாதனங்களை எடுத்துக்கொண்டு ஆர்வத்துடன் கடலுக்குள் சென்றனர்.
நண்டு கிலோ ரூ.400
இந்நிலையில் நேற்று மீன்பிடித்துவிட்டு மீனவர்கள் கரைக்கு திரும்பினர். அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தது போலவே மீனவர்கள் வலையில் இறால்கள், பாறை, சீலா, வஞ்சிரம், திருக்கை போன்ற மீன்களை அதிக அளவில் பிடித்து வந்தனர். இதேபோல் நண்டுகளும் ஏராளம் கிடைத்தன. இதனால் மீனவர்கள், வியாபாரிகள் மற்றும் பலதரப்பட்ட மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக பிடித்து வரப்பட்ட மீன்களை வாங்கி செல்ல இப்பகுதியில் இரவிலிருந்தே உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் இப்பகுதியில் குவிய தொடங்கி விட்டனர். மீன்களை வாங்கி செல்ல ஆந்திரா, கேரளா, கர்நாடகம், புதுச்சேரி போன்ற வெளி இடங்களிலிருந்து வியாபாரிகள் குவிந்திருந்தனர்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் மீன்களை வாங்கி சென்றனர். நண்டு கிலோ ரூ.400, இறால் ரூ.450, பாறை ரூ.350, சீலா ரூ.350, வஞ்சிரம் ரூ.500 என்ற விலைக்கு போனது. மேலும் மீனவர்கள் பிடித்து வந்த இறால் உள்ளிட்ட மீன்கள் போன்றவற்றிற்கு அவர்கள் எதிர்பார்த்த அளவில் போதிய விலை கிடைக்காததால் மீனவர்கள் வேதனையுடன் ஏமாற்றம் அடைந்தனர்.