கிணத்துக்கடவு தாலுகாவில் கிராமபகுதிகளுக்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி
கிணத்துக்கடவு தாலுகாவில் கிராமபகுதிகளுக்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொரோனா பரவலை தடுக்க சுகாதாரத்துறையினரும், வருவாய்துறையினரும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்காரணமாக தொற்று பாதிப்பு குறைந்து உள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி போடும் பணியும் நடைபெற்று வருகிறது.
இதன்படி, நல்லட்டிபாளையம், சொக்கனூர், வடசித்தூர் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக கிராம ஊராட்சிகளில் மட்டும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நேற்று சொலவம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சிக்கலாம்பளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனை அறிந்த பொதுமக்கள் அதிகாலை முதலே அங்கு திரண்டனர்.
அவர்கள் தடுப்பூசி போட நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதற்கிடையில், காலையில் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. இதில் தடுப்பூசி கையிருப்பை பொருத்து மொத்தம் 420 பேருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் கிடைக்காதவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். டோக்கன் பெற்றவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போட்டு சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டு வருகின்றனர். ஆனால் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக முகாம் நடத்தப்படுவது குறைந்து வருகிறது.
இதனால் தடுப்பூசி நடைபெறும் இடங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். மேலும் பலர் தடுப்பூசி செலுத்த முடியாமல் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். எனவே கிராம புறப்பகுதிகளுக்கு கூடுதல் தடுப்பூசி வழங்கவும், அனைத்து இடங்களிலும் தடுப்பூசி முகாம் நடத்தவும் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.