திருமருகலில் பெட்ரோல், டீசல் கேன்களுக்கு பாடை கட்டி நூதன போராட்டம்

திருமருகலில் பெட்ரோல், டீசல் கேன்களுக்கு பாடை கட்டி நூதன போராட்டம் நடந்தது.

Update: 2021-07-01 17:05 GMT
திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் டீசல், பெட்ரோல் கேன்களுக்கு பாடை கட்டி மாலை அணிவித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெண்கள் ஒப்பாரி வைத்தனர். பின்னர் பெட்ரோல், டீசல் கேன்களை வைத்து கட்டப்பட்ட பாடை சந்தைப்பேட்டை பகுதியில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு திருமருகல் சுடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நூதன போராட்டத்துக்கு திருமருகல் ஒன்றிய செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார்.

இதில் விவசாய சங்க மாவட்ட பொருளாளர் பொன்மணி, மாவட்ட குழு உறுப்பினர் ஸ்டாலின் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பேசினார்.

கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளுக்கு புதிதாக கடன் வழங்க வேண்டும். கூட்டுறவு கடன் சங்கங்களில் 2020-21-ம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி, ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், சி.ஐ.டி.யூ. ஒன்றிய செயலாளர் லெனின், ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பாலு, தலைவர் பிரபாகரன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டனர். திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன் தலைமையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வை கண்டித்து வேளாங்கண்ணி அருகே திருப்பூண்டி கடைத்தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர் அப்துல் அஜீஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் நாகை மாலி எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிகளை உடனடியாக குறைக்க வேண்டும். வருமான வரி வரம்புக்குள் வராத அனைத்து குடும்பத்தினருக்கும் அடுத்த 6 மாதங்களுக்கு மாதந்தோறும் ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய தலைவர் உமாநாத், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஊராட்சி செயலாளர் பழனியப்பன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

அதேபோல் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி கீழையூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாய தொழிலாளர் சங்க மாநில துணை செயலாளர் பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மாரிமுத்து, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் வெங்கட்ராமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சிக்கல் கடைவீதியில் பெட்ரோல்-டீசல், விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பகு தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணை செயலாளர் பேரறிவாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் சம்பந்தம், மாவட்ட கவுன்சிலர் சரபோஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாகையில், டிராக்டரை கயிறு கட்டி இழுத்து போராட்டம்
நாகையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து வயலில் டிராக்டரை கயிறு கட்டி இழுத்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொது செயலாளர் தனபாலன் தலைமை தாங்கினார். இதில் விவசாயிகள் தமிழ்ச்செல்வன், ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டு டிராக்டரை கயிறு கட்டி இழுத்து, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். போராட்டம் குறித்து காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொது செயலாளர் தனபாலன் கூறுகையில், ‘விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்றால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இல்லையெனில் விவசாயத்துக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை என்றால் முன்பு மாடுகளை கட்டி நிலத்தை உழுதது போல் இன்று நிலத்தை உழுவதற்கு மனிதர்கள் டிராக்டர்களை கட்டி இழுக்க வேண்டிய நிலை ஏற்படும். இதை மத்திய அரசுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக இந்த நூதன போராட்டத்தை நடத்தி உள்ளோம்’ என்றார்.

மேலும் செய்திகள்