மயிலாடுதுறை கலெக்டர் அலுவல கட்டுமான பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம்
மயிலாடுதுறையில், புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை,
தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 28-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் கலெக்டராக லலிதா நியமிக்கப்பட்டார். புதிய மாவட்டத்திற்கு கலெக்டர் அலுவலகம் அமைப்பதற்காக மயிலாடுதுறை அருகே தரங்கம்பாடி சாலையில் மூங்கில் தோட்டம் பால்பண்ணை பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
இந்த இடம் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமானதாகும். இதுதொடர்பாக தருமபுர ஆதீன குருமகாசன்னிதானம் மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அந்த நிலத்தை அரசு எடுத்துக்கொள்ள ஒப்புதல் அளித்தார்.
குடியிருப்புகளை தவிர்த்து அந்த பகுதி மக்களுக்கு கட்டுப்பாட்டில் இருந்து வந்த நஞ்சை, புஞ்சை நிலங்கள் 21 ஏக்கர் கையகப்படுத்தப்பட்டன.
தற்போது அந்த இடத்தில் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்காக தமிழக அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 14-ந் தேதி டெண்டர் வெளியிட்டது.
இந்த நிலையில் மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைப்பதற்கான இடத்தை பொக்லின் எந்திரம் மூலம் முதற்கட்டமாக சுத்தம் செய்யும் பணி நேற்று நடந்தது. இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் பணியை தடுத்து நிறுத்தினர்.
நிலம் ஆதீனத்திற்கு சொந்தமானது என்றாலும், நாங்கள் 200 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பகுதியில் விவசாயம் செய்து வருகிறோம். தற்போது திடீரென நிலத்தை கையகப்படுத்தினால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே எங்களுக்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று கூறி பணியை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பொதுமக்களுடன் மயிலாடுதுறை தாசில்தார் ராகவன் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தகவல் அறிந்து ராஜகுமார் எம்.எல்.ஏ., சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடமும், அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படாததால் நேற்று காலை 11 மணிக்கு போராட்டத்தை தொடங்கிய பொதுமக்கள் மாலை வரையில் அங்கேயே நின்று பணிகளை மேற்கொள்ள விடாமல் தடுத்தனர். இதனால் கலெக்டர் அலுவலகம் கட்டுவதற்கான இடம் சுத்தம் செய்யும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
கலெக்டர் அலுவலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நடத்திய போராட்டம் காரணமாக அந்த பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.