திருவாரூர் அருகே, விபத்தில் கல்லூரி மாணவி பலி: சிகிச்சை பலனின்றி தம்பியும் சாவு

திருவாரூர் அருகே லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவி இறந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த அவருடைய தம்பியும் நேற்று பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-07-01 16:28 GMT
திருவாரூர்:-

திருவாரூர் அருகே லாரியும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவி இறந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த அவருடைய தம்பியும் நேற்று பரிதாபமாக இறந்தார். 

கல்லூரி மாணவிகள்

திருவாரூர் அருகே உள்ள குளிக்கரை கிராமத்தில் வசித்து வருபவர் குமார். இவருடைய மகள் அபிராமி (வயது21). அதே பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகள் சினேகா (21). இவர்கள் இருவரும் திருவாரூர் கிடாரங்கொண்டானில் உள்ள திரு.வி.க. அரசு கலை கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தனர். கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு தாள்களை கல்லூரியில் கொடுப்பதற்காக அபிராமி, சினேகா ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றனர். இவர்கள் இருவரையும் அபிராமியின் தம்பி முத்துகுமார் (18) என்பவர் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு அழைத்து சென்றார். 

லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்

முத்துகுமார், அபிராமி, சினேகா ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் திருவாரூர் அருகே சீனிவாசபுரம் சாலை வளைவு பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற 3 பேரும் படுகாயத்துடன் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு அபிராமி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருவாரூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சக்திவேலை கைது செய்தனர். 

தம்பியும் சாவு

விபத்தில் படுகாயம் அடைந்த அபிராமியின் தம்பி முத்துகுமாருக்கு, திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முத்துகுமாரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விபத்தில் காயம் அடைந்த மற்றொரு கல்லூரி மாணவி சினேகாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் சிக்கி அக்காவும், தம்பியும் அடுத்தடுத்து உயிரிழந்தது திருவாரூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்