தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு மின்விளக்கு எரியாததால் இருள்சூழ்ந்து காணப்படும் முக்கிய சாலைகள்
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு மின்விளக்குகள் எரியாததால் இருள்சூழ்ந்து காணப்படும் முக்கிய சாலைகளினால் மக்கள் அவதிப்படுகின்றனர். எப்போது ஒளிரும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை மாநகரின் மிக முக்கியமான சாலைகளில் ஒன்றான மருத்துவக்கல்லூரி சாலையின் மையப்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் மின்கம்பங்கள் குறிப்பிட்ட இடைவெளி விட்டு அமைக்கப்பட்டு, மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல் கேட் முதல் 3-வது கேட் வரை வரிசையாக உள்ள 14 மின் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் கடந்த சில தினங்களாக எரியவில்லை. இந்த விளக்குகள் எரியாததால் அந்த பகுதியே இருளடைந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பகல்நேரம் மட்டுமின்றி இரவு நேரத்திலும் ஏராளமானோர் சிகிச்சைக்காக அழைத்து வரப்படுவார்கள். சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உறவினர்களை பார்ப்பதற்காக ஏராளமானோர் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இப்படி வருபவர்கள் இருள்சூழ்ந்து காணப்படும் பகுதியை கடந்து செல்லும் போது மிகவும் சிரமப்படுகின்றனர். இரவு 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை மக்கள் அதிகஅளவில் அந்த சாலையை கடந்து செல்கின்றனர்.
அப்படி செல்பவர்கள் ஒருவித அச்சத்துடனே செல்லும் நிலை உள்ளது. ஏற்கனவே அந்த சாலையோரத்தில் வடிகால் வசதி ஏற்படுத்தும் பணி நடக்கிறது. ஆங்காங்கே வேகத்தடையும் அமைக்கப்பட்டு இருக்கிறது. பகலில் வாகனங்களில் செல்லும்போது இவைகள் எல்லாம் நம் கண்களுக்கு தெரியும். ஆனால் இரவு நேரத்தில் அந்த பகுதி முழுவதும் இருள்சூழ்ந்து காணப்படுவதால் வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்குவதுடன், தடுப்பு சுவர்களில் மோதுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
அதுமட்டுமின்றி எப்போதும் மக்கள் வந்து செல்லக்கூடிய பகுதியிலேயே இருள்சூழந்து காணப்படுவதால் இந்த இருளை பயன்படுத்தி சிலர், திருட்டு சம்பவங்களில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது. அதுபோன்று பழைய கலெக்டர் அலுவலக சாலையிலும் 5 மின்விளக்குகள் எரியவில்லை. இந்த சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமத்துடன் அந்த சாலையை கடந்து செல்லும் நிலை உள்ளது.
சிலர், பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்கக்கூடிய பரிதாப நிலையும் உள்ளது. எனவே முக்கிய சாலைகளில் மின்விளக்குகள் எப்போது ஒளிரும் என எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளன. மின்விளக்குகளை உடனடியாக எரிய வைக்க மாநகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.