கொரோனா பரவலை தடுக்க சிறப்பு ஏற்பாடுகள் மெட்ரோ ரெயில் நிலையங்களில் தூய்மையான காற்று, சராசரி வெப்பம்-ஈரப்பதம் பராமரிப்பு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய பொதுப்பணித்துறையின் வழிகாட்டுதலின்படி சுரங்க ரெயில் நிலையங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவில் வெப்பம்- ஈரப்பதம் மற்றும் தூய்மையான காற்று பராமரிக்கப்படுகிறது என்று சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

Update: 2021-07-01 12:58 GMT
சென்னை,

தமிழக அரசு பிறப்பித்துள்ள ஊரடங்கு தளர்வுகளின் அடிப்படையில் கடந்த மாதம் 21-ந் தேதியில் இருந்து 50 சதவீத இருக்கைகள் வசதிகளுடன் மீண்டும் மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பயணிகளின் பாதுகாப்பை கருதி பல முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

கொரோனா அறிகுறியற்ற பயணிகள் மட்டுமே ரெயில் நிலையங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். மாறாக பயணிகளில் எவருக்கேனும் நோய் அறிகுறி அல்லது அதிக உடல் வெப்பநிலை இருந்தால் அவர்களுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. அத்துடன் பயணிகள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய பொதுப்பணித்துறை வழிகாட்டுதலின்படி, கொரோனா பரவலை தவிர்க்கும் விதத்தில் அனைத்து சுரங்க வழிப்பாதை ரெயில் நிலையங்களிலும் 24 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் அளவில் தட்பவெட்ப சூழலும், 40 முதல் 70 சதவீதம் வரையிலான நிர்ணயிக்கப்பட்ட அளவில் ஈரப்பதம் மட்டுமே பராமரிக்கப்படுகிறது. ரெயில்கள் மற்றும் ரெயில் நிலையங்களின் உட்புறம் எப்போதும், சுகாதாரமான காற்றை பராமரிக்கவும், தினந்தோறும் தேவையான அளவு தூய்மையான காற்று சுழற்சி முறையிலும் செலுத்தப்படுகிறது.

நுண்ணிய கிருமி அழிப்பு

காற்று வடிப்பான்கள், குளிர்சாதனப் பெட்டி சுருள்கள், காற்று சீர்படுத்தும் கருவிகள் மற்றும் குளிர்சாதன வலைகளும் காற்று செல்லும் பாதைகளிலும் அல்ட்ரா வைலட் கதிர்கள் செலுத்தப்பட்டு நுண்ணிய கிருமிகள் கூட அழிக்கப்பட்டு தூய்மை உறுதி செய்யப்படுகிறது.

ரெயில்கள், நிலையங்கள், வளாகம், பயணிகள் பயன்படுத்தும் லிப்டு சுவிட்சுகள், நகரும் படிக்கட்டுகள், கழிப்பறைகள் அடிக்கடி கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

பயணிகளிடம் அபராதம்

விழிப்புணர்வுக்காக ரெயில்கள் மற்றும் நிலையங்களில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க எக்ஸ் குறியீடு வைக்கப்பட்டுள்ளது. அத்துடன் விழிப்புணர்வு அறிவிப்புகள் மற்றும் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டு உள்ளன.

வழிகாட்டு நெறிமுறைகளை பயணிகள் கடைப்பிடிக்கிறார்களா? என்பதை அறிய சிறப்பு குழுக்கள் மற்றும் கேமராக்கள் முலம் கண்காணிக்கப்படுகின்றனர். முக கவசம் அணியாத பயணிகளிடம் இருந்து கடந்த 10 நாட்களில் 27 பயணிகளிடம் இருந்து ரூ.5 ஆயிரத்து 400 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவல்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்