சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ ரூ.10 லட்சம் தப்பியது
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஏ.டி.எம். மையம் நேற்று திடீரென்று தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள் தீயை உடனடியாக அணைத்ததால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.10 லட்சம் தப்பியது.
சேலம்
ஏ.டி.எம். மையத்தில் தீ
சேலம் மாநகரின் மையப்பகுதியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட அரசு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. கலெக்டர் அலுவலகத்துக்குள் பாரத் ஸ்டேட் வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதையொட்டி ஏ.டி.எம். மையமும் உள்ளது.
கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் உள்பட பலர் இந்த ஏ.டி.எம். மையத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வங்கியில் பணிபுரியும் ஊழியர்கள் அங்கிருந்து வேகமாக வெளியேறினர். மேலும் வங்கியும் பூட்டப்பட்டது. ஏ.டி.எம். மையத்தில் இருந்த ஏ.சி. மற்றும் யு.பி.எஸ். ஆகியவற்றில் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
ரூ.10 லட்சம் தப்பியது
இதுகுறித்து செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் கலைச்செல்வன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
பின்னர் தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு ஏ.டி.எம். மையத்தில் எரிந்த தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்களின் முயற்சியால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த ரூ.10 லட்சம் தப்பியது. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவம் நடத்த இடத்தை கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார். கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் தீப்பிடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.