கர்நாடகத்தில் ஆசிரியர்கள் பணி இடமாறுதலுக்கான கலந்தாய்வு- பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் தகவல்
கர்நாடகத்தில் ஆசிரியர் பணி இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
பெங்களூரு:
பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பணி இடமாறுதல் கலந்தாய்வு
கர்நாடகத்தில் இன்று (நேற்று) முதல் ஆசிரியர்கள் பணி இடமாறுதல் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. கடந்த 2019-20-ம் கல்வி ஆண்டில் கட்டாய பணி இடமாறுதலுக்கு ஆளான ஆசிரியர்கள் மீண்டும் தாங்கள் பணியாற்றிய தாலுகா மற்றும் மாவட்டங்களில் இடமாற்றம் செய்ய முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் பணி இடமாறுதலுக்காக கலந்தாய்வு நடத்தப்படும். இதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த மாத இறுதி வரை காலியாகும் ஆசிரியர் பணியிடங்கள், வருகிற 12-ந் தேதி அறிவிக்கப்படும். இதற்காக ஆசிரியர்கள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் ஒரு பட்டியலை தயாரித்து ஆகஸ்டு மாதம் ஆசிரியர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும். அதன் பிறகு வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி தொடக்க பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அதே மாதம் 21-ந் தேதி உயர்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு பணி இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்.
கால அட்டவணை
பல்வேறு சிக்கல்களை சரிசெய்து, இந்த பணி இடமாறுதல் பணிகளை தொடங்கியுள்ளோம். இதன் பயனை சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பெற வேண்டும். தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மாணவர்களுக்கு கற்பிக்கும் பணி வருகிற 5-ந் தேதி தொடங்குகிறது. இதுகுறித்த கால அட்டவணை அனைத்து பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த கால அட்டவணையை குழந்தைகளின் பெற்றோருக்கு அனுப்பி, தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் வகுப்புகளை கவனிக்க உரிய நடவடிக்கை எடுக்கும்படி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், 8 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் வகுப்புகள் நடைபெற உள்ளன. இந்த தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் வரும் வகுப்புகளை மாணவர்கள் கவனித்து பயனை பெற வேண்டும்.
இவ்வாறு சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.