தேர்தல் வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவார்; சபாநாயகர் மு.அப்பாவு பேச்சு
ஏழைகளின் கஷ்டங்களை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என சபாநாயகர் மு.அப்பாவு கூறினார்.
களக்காடு:
ஏழைகளின் கஷ்டங்களை அறிந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார், என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
நலத்திட்ட உதவிகள்
நெல்லை மாவட்டம் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் கிராம மேம்பாட்டு நிறுவனம் சார்பில், கொரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட 216 பெண் பீடி தொழிலாளர்களுக்கு மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை மக்களின் கஷ்டங்களை உணர்ந்தவர். அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வசதியையும் அவர் ஏற்படுத்தி உள்ளார். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகளையும், அனைத்து திட்டங்களையும் முதல்-அமைச்சர் நிறைவேற்றுவார்.
தொழில்நுட்ப பூங்கா
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள நாங்குநேரி, கங்கைகொண்டான் தொழில்நுட்ப பூங்கா பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் தென் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தனது அயராத உழைப்பின் காரணமாக கொரோனா பரவலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்
இதில் நெல்லை எம்.பி. ஞானதிரவியம், நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பி.சி.ராஜன், வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், செல்வகருணாநிதி, நாங்குநேரி தாசில்தார் இசக்கிபாண்டி, களக்காடு பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுஷ்மா, சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், கிராம மேம்பாட்டு நிறுவன செயலாளர் மரியஜேம்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர்கள் மனு
முன்னதாக களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மதியரசு (பொறுப்பு) மற்றும் ஆசிரியர்கள் சபாநாயகர் அப்பாவுவிடம் கொடுத்த மனுவில், களக்காடு பஸ் நிலையத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள மூங்கிலடி பகுதியில் அரசு பள்ளியின் ஒரு பிரிவு செயல்படுகிறது. அந்த பள்ளிக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. மாணவர்கள் நலன் கருதி, நிறுத்தப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டு இருந்தது.
இதனைதொடர்ந்து சபாநாயகர் அப்பாவு உடனடியாக நெல்லை அரசு போக்குவரத்து கழக அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு இதுபற்றி பேசினார். அதன்பின்னர் நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் அப்பாவு, களக்காடு பஸ் நிலையத்தில் இருந்து அரசு பள்ளிக்கு மீண்டும் பஸ் இயக்கப்படும், என்று தெரிவித்தார். சபாநாயகர் அப்பாவுவின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர்கள், மாணவர்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.