10 ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

10 ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2021-06-30 18:25 GMT
கோவை

குறைவான மதிப்பெண் எடுத்ததால் வேதனை அடைந்த 10-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாள்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

10-ம் வகுப்பு மாணவி

கோவை ஆவாரம்பாளையம், ராமசாமி லே-அவுட்டை சேர்ந்தவர் மருதுபாண்டி. இவருடைய மகள் யாழினி (வயது 15). இவள் சித்தா புதூரில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தாள். 

மாணவி தனது பெற்றோரிடம் பள்ளியில் மதிப்பெண் பட்டியலை வாங்கி வருவதாக கூறி சென்றார்.

பின்னர் அங்கு சென்று மதிப்பெண் பட்டியலை வாங்கி பார்த்தபோது, அதில் 500-க்கு 180 மதிப்பெண் மட்டுமே எடுத்து இருப்பதாக குறிப்பிடப் பட்டு இருந்தது. 

குறைவான மதிப்பெண் 

இதனால் பிளஸ்-1 படிக்க நல்ல குரூப் கிடைக்காதே என அவர் வேதனை அடைந்தாள். பின்னர் வீட்டிற்கு வந்து தான் குறைவான மதிப்பெண் எடுத்து உள்ளதாகவும், மற்ற மாணவிகள் தன்னை கிண்டல் செய்வார்கள் என்று பெற்றோரிடம் கூறி அழுது புலம்பி உள்ளார். 

அவரது பெற்றோர் அவளை சமாதானம் செய்தனர். மன உளைச்சலில் இந்த மாணவி வீட்டில் உள்ள குளியல் அறைக்கு சென்றார். அவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வராததால், சந்தேகம் அடைந்த பெற்றோர் கதவை தட்டினார்கள். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை 

இதனால் அவர்கள் அந்த கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது அங்கு யாழினி தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். அதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கதறி துடித்தனர்.

 இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பீளமேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் தற்கொலை செய்து கொண்ட யாழினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இது குறித்து இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

மேலும் செய்திகள்