பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு பாடபுத்தகம் வினியோகம்

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடபுத்தகம் வினியோகம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2021-06-30 17:16 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடபுத்தகம் வினியோகம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பாடபுத்தகங்கள்

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி போகிறது. இதற்கிடையில் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கு தேவையான பாடபுத்தகங்கள் பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் உள்ள நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது. பாடபுத்தகங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் கல்வி மாவட்ட அலுவலர் கண்ணிச்சாமி வழங்கினார். 

அப்போது பள்ளி ஆய்வாளர் ஜெயச்சந்திரன் மற்றும் பலர் உடன் இருந்தனர். இதை தொடர்ந்து பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாடபுத்தகங்களை ஆசிரியர்கள் வழங்கும் பணியும் தொடங்கி உள்ளது.
இதுகுறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:-

பாதுகாப்பு வழிமுறைகள்

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் அரசு உயர்நிலை, அரசு மேல்நிலை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 50 பள்ளிகள் உள்ளன. இதில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை 21 ஆயிரத்து 141 பேர் படிக்கின்றனர். மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்கு ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 439 புத்தகங்கள் வந்து உள்ளன. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வாகனங்களில் பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

பள்ளிகளில் ஆசிரியர்கள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. புத்தகங்கள் வாங்குவதற்கு பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகளின் உடல்நிலை வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். 

மேலும் அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி புத்தகங்களை வழங்க வேண்டும் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பாடபுத்தகங்களுடன் கல்வி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பப்படும் நிகழ்ச்சிக்கான கால அட்டவணையும் வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்