கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலி
கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியானார்கள். புதிதாக 102 பேருக்கு பாதிப்பு உறுதியானது.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 57 ஆயிரத்து 842 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நேற்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில் புதிதாக 102 பேருக்கு பாதிப்பு உறுதியானது. இவர்களில் சென்னை, மதுரையில் இருந்து மங்களூர், பண்ருட்டி வந்த 3 பேருக்கும், அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த குமராட்சி, கம்மாபுரத்தை சேர்ந்த 3 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இது தவிர சளி, காய்ச்சல், இருமல் போன்ற நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த 22 பேருக்கும், கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த 74 பேருக்கும் பாதிப்பு உறுதியானது.
நேற்று முன்தினம் வரை 56 ஆயிரத்து 42 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நேற்று 158 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியானார்கள்.
இதன் விவரம் வருமாறு:-
4 பேர் பலி
பண்ருட்டியை சேர்ந்த 78 வயது மூதாட்டி, காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த 50 வயது ஆண், கம்மாபுரத்தை சேர்ந்த 49 வயது பெண், விருத்தாசலத்தை சேர்ந்த 41 வயது ஆண் ஆகிய 4 பேரும் நோய்த்தொற்று அறிகுறிகளுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். அங்கு அவர்களுக்கு உமிழ்நீர் எடுத்து பரிசோதனை செய்ததில் நோய்த்தொற்று உறுதியானது. இருப்பினும் அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கொரோனா பாதித்த 890 பேர் கடலூர் மாவட்ட மருத்துவமனைகளிலும், 92 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் 66 கட்டுப்பாட்டு பகுதிகள் இருந்த நிலையில், நேற்று 57 ஆக குறைந்தது. இதை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.