ரெயிலில் கடத்தப்பட்ட 3½ டன் ரேஷன் அரிசி பறிமுதல். ஜீப்பில் 15 கி.மீ. தூரம் விரட்டிச்சென்ற அதிகாரி
ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் கடத்தப்பட்ட 3½ டன்ரேஷன் அரிசியை, ஜீப்பில் 15 கி.மீ.தூரம் பின்தொடர்ந்து சென்று வட்ட வழங்கல் அதிகாரி அதிரடியாக பறிமுதல் செய்தார்.
ஜோலார்பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தை அடுத்த ரெயில்வே கேட் அருகில் பெங்களூருவை நோக்கி செல்லும் பாசஞ்சர் ரெயிலில் கர்நாடகா மாநிலத்துக்கு ரேஷன் அரிசியை கடத்த, அப்பகுதியில் மூட்டைகளை மறைத்து வைத்திருப்பதாக நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் தலைமையில் உதவியாளர் அருள்பாண்டியன் மற்றும் கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதற்குள் பாசஞ்சர் ரெயிலில் மர்மநபர்கள் யாரோ 3½ டன் ரேஷன் அரிசியை கடத்தி சென்று விட்டனர். அந்த ரெயில் பச்சூர் ரெயில் நிலையம் நோக்கி புறப்பட்டது.
15 கி.மீ.தூரம் ஜீப்பில் விரட்டிச்சென்றார்
அதை தொடர்ந்து நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் மற்றும் அலுவலர்கள் அந்த ரெயிலை பின் தொடர்ந்து பச்சூர் ரெயில் நிலையத்தை நோக்கி சாலை மார்க்கமாக 15 கிலோ மீட்டர் தூரம் ஜீப்பில் விரட்டிச் சென்றனர். பின்னர் பச்சூர் ரெயில் நிலையத்தில் நின்ற அந்த பாசஞ்சர் ரெயிலில் ஏறி பெட்டிகளில் அவர்கள் சோதனை செய்தார்.
அப்போது கடத்தி வந்த ரேஷன் அரிசி மூட்டைகள் பயணிகளின் இருக்கைகளுக்கு அடியிலும், கழிவறைகளிலும் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்து பச்சூர் ரெயில் நிலையத்தில் இறக்கினர். அதன் பிறகு பறிமுதல் செய்யப்பட்ட 3½ டன் ரேஷன் அரிசியை நாட்டறம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
ஓடும் ரெயிலில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை 15 கிலோமீட்டர் தூரம் ஜீப்பில் பின் தொடர்ந்து சென்று பறிமுதல் செய்த வட்ட வழங்கல் அதிகாரிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.