பத்ரா மேல் அணை திட்டம் விரைவில் தேசிய திட்டமாக அறிவிக்கப்படும் - முதல்-மந்திரி எடியூரப்பா
பத்ரா மேல் அணை திட்டம் விரைவில் தேசிய திட்டமாக அறிவிக்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு:
எத்தினஒலே குடிநீர் திட்டம்
எத்தினஒலே குடிநீர் திட்டம், பத்ரா மேல் அணை திட்டம் ஆகிய திட்டங்களின் வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடியூரப்பா பேசியதாவது:-
எத்தினஒலே குடிநீர் திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு இதுவரை ரூ.9 ஆயிரத்து 3 கோடி செலவாகியுள்ளது. முதல்கட்ட திட்ட பணிகள் மூலம் வேதாவதி கால்வாய்க்கு தண்ணீர் விட வேண்டும். அதற்கு ஏற்ப தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும். இந்த எத்தினஒலே குடிநீர் திட்டம் 7 மாவட்டங்கள், 29 தாலுகாக்கள், 6,557 கிராமங்களில் வசிக்கும் 68 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு குடிநீர் கிடைக்கும்.
நிதி உதவி கிடைக்கும்
பத்ரா மேல் அணை திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. விரைவில் இந்த திட்டம் தேசிய திட்டமாக மத்திய அரசால் அறிவிக்கப்படும். இதன் மூலம் மத்திய அரசின் நிதி உதவி கிடைக்கும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட மத்திய மந்திரியுடன் தொலைபேசி மூலமாக நான் பேசினேன்.
தேவைப்பட்டால் மத்திய மந்திரியை நேரில் சந்தித்து வலியுறுத்தவும் நான் தயாராக உள்ளேன். இந்த பத்ரா மேல் அணை திட்ட பணிகளுக்காக கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2,362 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தால் துமகூரு, சித்ரதுர்கா, தாவணகெரே ஆகிய மாவட்டங்கள் பயன் பெறும். நீர்ப்பாசன திட்டங்களை எந்த குறைபாடும் இல்லாமல் குறித்த காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும். இந்த திட்ட பணிகளில் ஏதாவது தவறுகள் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
இந்த கூட்டத்தில் முதல்-மந்திரியின் கூடுதல் தலைமை செயலாளர் ரமணரெட்டி, நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஐ.எஸ்.என்.பிரசாத், நீர்ப்பாசனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ராகேஷ்சிங் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.