கட்டபிரபா ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு

பாகல்கோட்டை அருகே கட்டபிரபா ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு உண்டானது. மீன்கள் செத்ததற்கு ஆற்றில் கலக்கும் சர்க்கரை ஆலை கழிவுகளே காரணம் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு கூறியுள்ளனர்.

Update: 2021-06-29 21:08 GMT
பாகல்கோட்டை:

செத்து மிதந்த மீன்கள்

  வடகர்நாடக மாவட்டமான பாகல்கோட்டையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டத்தில் ஓடும் கட்டபிரபா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் முதோல் தாலுகா மச்சகானூர் கிராமத்தில் ஓடும் கட்டபிரபா ஆற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் அந்த கிராம மக்கள் ஆற்றுக்கு சென்று பார்த்த போது ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதனை பார்த்து கிராம மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

  மேலும் சம்பவம் குறித்து முதோல் போலீசாருக்கும், மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு இருந்தது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார், அதிகாரிகள் ஆற்றில் செத்து மிதந்த மீன்களை பார்வையிட்டனர். பின்னர் ஆற்றில் செத்து கிடந்த மீன்கள் அகற்றப்பட்டன.

சர்க்கரை ஆலை கழிவுகள்

  இந்த நிலையில் மீன்வளத்துறை அதிகாரிகளை கிராம மக்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது கட்டபிரபா ஆறு ஓடும் பகுதிகளில் 8 சர்க்கரை ஆலைகள் உள்ளன. அந்த சர்க்கரை ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் ஆற்றில் கலப்பதால் தான் மீன்கள் செத்து விட்டன. சர்க்கரை ஆலை கழிவுகளை ஆற்றில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று கூறி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.

  அப்போது அதிகாரிகள் சர்க்கரை ஆலை கழிவுகள் ஆற்றில் கலந்ததால் தான் மீன்கள் செத்தது உறுதியானால் சம்பந்தப்பட்ட சர்க்கரை ஆலைகள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், கழிவுகள் ஆற்றில் கலக்கதவாறு தடுக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு உண்டானது.

மேலும் செய்திகள்