அட்டகாசம் செய்து வந்த காட்டுயானை பிடிபட்டது

கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த காட்டுயானையை வனத்துறையினர் கும்கி யானைகளின் உதவியுடன் பிடித்தனர்.

Update: 2021-06-29 20:56 GMT
மண்டியா:

காட்டுயானை அட்டகாசம்

  ஹாசன் மாவட்டம் சக்லேஷ்புரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரு காட்டுயானை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அட்டகாசம் செய்து வந்தது. அந்த காட்டுயானை அங்குள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது. மேலும் 2 விவசாயிகளை தாக்கி கொன்று இருந்தது.

  இந்த நிலையில் அந்த காட்டுயானையை வனத்துறையினர் பிடித்து யானைகள் சிவமொக்காவில் உள்ள யானைகள் முகாமுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு வைத்து அந்த காட்டுயானைக்கு வனத்துறையினர் ரேடியோ காலர் பொருத்தினர். அந்த யானைக்கு கும்கி பயிற்சி அளிக்க முயன்றனர். ஆனால் அது தொடர்ந்து ஆக்ரோஷமாகவே இருந்தது. இதையடுத்து அரசு உத்தரவின்பேரில் அந்த காட்டுயானையை வனத்துறையினர் சாம்ராஜ்நகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பந்திப்பூர் வனப்பகுதியில் விட்டனர்.

கும்கி யானைகள்

  இந்த நிலையில் அந்த காட்டுயானை பந்திப்பூர் வனப்பகுதியியில் இருந்து வெளியேறி மண்டியா மாவட்டம் ஹலகூர் வழியாக மத்தூர் அருகே உள்ள கொலகெரே கிராமத்திற்குள் நுழைந்தது. பின்னர் அந்த காட்டுயானை அங்குள்ள விளை நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்தது. மேலும் பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்தது. இதுபற்றி கிராம மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி இருந்தததால் அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் எளிதில் கண்டறிந்தனர்.

  மேலும் அதை பிடிக்க 4 கும்கி யானைகளை வரவழைத்தனர். நேற்று காலையில் அந்த காட்டுயானை நீலகண்டனஹள்ளி கிராமம் வழியாக ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா தாலுகாவிற்கு உட்பட்ட அவ்வேரஹள்ளி கிராமத்திற்குள் புகுந்தது.

பிடிபட்டது

  இதுபற்றி அறிந்த வனத்துறையினர் நேற்று காலையில் கும்கி யானைகளுடன் அங்கு சென்று அந்த காட்டுயானையை பிடித்தனர். பின்னர் அதை கிரேன் எந்திரம் மூலம் லாரியில் ஏற்றி சாம்ராஜ்நகர் மாவட்டம் கேகுடியில் உள்ள யானைகள் முகாமுக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்